தமிழகம்

சென்னை ரயில்வே கோட்ட முக்கிய நிலையங்களில் 96 தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்களை நிறுவ திட்டம்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை ரயில்வே கோட்டத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் பயணிகள் வசதிக்காக, 96 தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்களை வரும் ஏப்ரல்மாதத்துக்குள் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.

ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுன்ட்டர்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், தானியங்கி இயந்திரம் மூலம்டிக்கெட் பெறும் வசதி சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. கரோனா பாதிப்பின்போது, இந்த சேவை முடங்கியது.

இதற்கிடையே, புதிதாக ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, ரயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் இயந்திரங்கள் பல கட்டங்களாக நிறுவப்படுகின்றன. சென்னை ரயில்வே கோட்டத்தில் எழும்பூர், கிண்டி, தாம்பரம், ஆவடி, பெரம்பூர், அம்பத்தூர் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் மீண்டும்நிறுவப்பட்டுள்ளன. பயணிகள் வருகை அதிகமாக உள்ள ரயில்நிலையங்களில் கூடுதல் கவுன்ட்டர்கள் இல்லாததால், அலுவலக நேரங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட் எடுக்க வேண்டியுள்ளது. அதுபோல, ஒருசில ரயில் நிலையங்களில் மட்டுமே தானியங்கி டிக்கெட் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன.

பல ரயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் எடுக்கும் இயந்திரங்கள் இல்லாததால், பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில், அனைத்து ரயில்நிலையங்களில் தானியங்கி டிக்கெட் எடுக்கும் இயந்திரங்களை நிறுவ வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை ரயில்வே கோட்டத்தில் முக்கிய நிலையங்களில் 96 தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்களை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை ரயில்வேகோட்ட அதிகாரிகள் கூறியதாவது: ரயில் நிலையங்களில் தானியங்கி இயந்திரங்கள் வாயிலாக டிக்கெட் எடுக்கும் வசதியை படிப்படியாக விரிவுபடுத்தி வருகிறோம். சென்னை ரயில்வே கோட்டத்தில் முக்கிய ரயில் நிலையங்களில் 130 தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்களை நிறுவ முன்மொழியப்பட்டுள்ளது. தற்போது,19 ரயில் நிலையங்களில் 34தானியங்கி டிக்கெட் இயந்திரங்களை நிறுவி பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளோம்.

அதாவது, அம்பத்தூர், ஆவடி, பேசின்பாலம், பெரம்பூர், திருவள்ளூர், வில்லிவாக்கம், கிண்டி, கோடம்பாக்கம், பூங்கா நிலையம், கடற்கரை, சென்னை கோட்டை, நுங்கம்பாக்கம், பல்லாவரம், பரங்கிமலை, செங்கல்பட்டு, தாம்பரம், சூலூர்பேட்டை உட்பட 19 நிலையங்களில் தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்களை நிறுவிஉள்ளோம். வரும் ஏப்ரல் மாதத்துக்குள் மேலும் 96 தானியங்கி டிக்கெட்இயந்திரங்களை நிறுவ திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT