தமிழகம்

மோடி கோவை வருகை: குழப்பும் பாஜக-வினர்

கா.சு.வேலாயுதன்

நரேந்திர மோடியின் கோவை வருகையை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி இருக் கிறது கோவை போலீஸ். அதே நேரம், பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு பாஜக தரப்பில் ஒத்துழைப்பு இல்லாததால் போலீஸார் திணறுகின்றனர்.

1997-ல் நடந்த மதக்கலவரம் மற்றும் 1998-ல் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களுக்குப் பிறகு கோவை மிகவும் பாதுகாக்கப்பட்ட நகரமாக இருந்து வருகிறது. குறிப்பாக இந்த சம்பவத்துக்குப் பிறகு பாஜக ஆட்சியில் அக்கட்சியின் மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்டவர் கள் கோவை வரும்போதெல்லாம் உள்ளூர் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்படும்.

கடந்த ஏழெட்டு ஆண்டுகளில் தான் இந்த அழுத்தம் குறைந்து சாதாரண நிலைக்கு கோவை திரும்பியது. இந்த சூழலில்தான் தற்போது பா.ஜ.க வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனையும், பொள்ளாச்சி வேட்பாளர் ஈஸ்வர னையும் ஆதரித்து பிரச்சாரம் செய்ய கோவை வருகிறார் மோடி.

இதில்கூட பாஜக கூட்டணிக்கட்சி வேட்பாளர்கள் முரண்பட்ட தகவல்களையே அளித்தனர். 16, 17 தேதிகளில் மோடி தமிழகத்தில் பிரச்சாரத்துக்கு தேதி தந்துள்ளதாகவும், பிரச்சாரத்துக்கு உகந்த நான்கு இடங்களை கோவையில் தேர்வு செய்து வைக்குமாறும் தலைமை கேட்டுக் கொண்டுள்ளதாகவும் முதலில் கூறினர். அந்த சமயம் ஈரோட்டில் கொமதேக ஈஸ்வரன் ‘மோடி வருகை 16-ம் தேதி நிச்சயம்’ என்று அறிவிக்க குழம்பியது போலீஸ்.

இந்த சூழலில் சனிக்கிழமை மதியம் 12.30 மணிக்கு பாஜக-வினர், கோவை. கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் மோடி தேர்தல் பிரச்சாரம் செய்ய வருவதாகவும், அதற்கு அனுமதி வழங்கும் படியும் அனுமதி கோரும் கடிதம் தந்தனர். அதன்பிறகு 1.30 மணிக்கு அவர்களே திரும்ப வந்து, மோடியின் பிரச்சாரம் கொடீசியா மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. எனவே அங்கு நடத்த அனுமதிக்குமாறு வேறு கடிதம் தந்து பழைய கடிதத்தை வாபஸ் பெற்றனர்.

இதுகுறித்து பாஜக தேசியக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணனிடம் பேசியதில், “மோடி 16-ம் தேதி கோவை, ராமநாதபுரம் ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்வது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் ராமநாதபுரம் சென்று விட்டு கோவையில் மாலை நிகழ்ச்சியாக வைத்துக் கொள்வது; இரவு கோவையில் தங்குவது, பிறகு காலை ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி வழியாக பிரச்சாரம் செய்வது ஆகிய திட்டங்களில் மாற்றங்கள் செய்வதால் ஷெட்யூல் அறிவிப்பதில் கொஞ்சம் சிக்கல் இருக்கிறது. சனிக்கிழமை இரவுக்குள் இறுதித் தகவல் ஆமதாபாத்திலிருந்து வந்துவிடும்’ என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT