ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட காளைமாடு சிலை அருகே, பறக்கும் படையினருடன் இணைந்து வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட துணை ராணுவப்படையினர். 
தமிழகம்

ஈரோட்டில் பறக்கும் படையினருடன் இணைந்து துணை ராணுவத்தினர் தீவிர வாகன சோதனை

செய்திப்பிரிவு

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் பறக்கும்படையினருடன் இணைந்து, துணை ராணுவப்படையினரும் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி வாக்காளர் களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும்வகையில், 3 பறக்கும் படையினர், 4 நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகனச்சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ்நாடு சிறப்பு காவல் படையைச் சேர்ந்த 160 வீரர்கள் பாதுகாப்பு பணிக்காக ஈரோடு வந்துள்ளனர். பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்ட 32 வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பணியில்ஈடுபட துணை ராணுவப்படை யினரும் ஈரோடு வந்துள்ளனர். வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில், நேற்று முன்தினம் மாலை துணை ராணுவப்படை, சிறப்பு காவல்படை, உள்ளூர் போலீஸார் பங்கேற்ற அணிவகுப்பு நடந்தது.

இந்நிலையில், பறக்கும்படையினர் மற்றும் நிலைக்குழு வினருடன் இணைந்து, துணை ராணுவப் படையினரும் வாகனத் தணிக்கை பணியில் நேற்று முதல் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். ஒரு குழுவில் 8 துணை ராணுவத்தினர், நிலை கண்காணிப்பு குழுவினர் 4 பேர், காவல்துறையினர் 3 பேர் மற்றும் ஒளிப்பதிவாளர், ஓட்டுநர் என 17 பேர் இடம் பெற்றுள்ளனர்.

ஈரோடு ரயில் நிலையம், காளை மாட்டு சிலை, கொல்லம் பாளையம், செங்கோடம்பள்ளம் அக்ரஹாரம், சூரம்பட்டி நால்ரோடு உள்ளிட்ட 15 இடங்களில் துணை ராணுவத்தினர் துணையுடன் தீவிர வாகனச் சோதனை நடந்து வருகிறது. பயணம் செய்யும் நபர்கள் குறித்த விவரங்களும் சேகரிக்கப்படுகின்றன.

SCROLL FOR NEXT