புதுச்சேரி சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் விவாதத்தை தொடர்ந்து முதல்வர் நாராயணசாமி பதிலளித்து பேசியதாவது:
ஆளுநர் உரை என்பது கடந்த ஆண்டில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள், அரசின் செயல்பாடுகளை குறிப்பிட்டும், வரும் காலங்களில் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்களை கோடிட்டு காட்டுவதுதான். ஆளுநரின் உரையில் அரசின் எல்லா திட்டத்தையும் குறிப்பிட முடியாது. பட்ஜெட், துறை வாரியான விவாதங்கள் நடக்கும்போது திட்டங்களுக்கான முறையான பதில்கள் கொடுக்கப்படும்.
புதுச்சேரி மாநிலத்தில் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி ஏற்பட வேண்டும். நகர்புறம் மட்டுமல்ல கிராமப்புறங்களிலும் வளர்ச்சி ஏற்பட வேண்டும் என்ற எண்ணத்தில் எங்கள் அரசு செயல்பட்டு வருகிறது.
தனிக்கணக்கு ஆரம்பிக்கும் முன் மத்திய அரசு 70 சதவீதம் மானியம், 30 சதவீதம் மாநில அரசின் வருவாயை எடுத்து திட்டங்கள் போடப்பட்டது. இப்போது தனிக்கணக்கு ஆரம்பித்தபோது 70 சதவீத மத்திய அரசின் மானியம், 30 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு நெருக்கடி கொடுத்து தனிக்கணக்கு ஆரம்பித்தது.
அப்போது குறிக்கிட்ட அன்பழகன், தனிக்கணக்கை கொண்டு வந்தது மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசுதான். அதனை திசைத்திருப்பக் கூடாது என்றார்.
தொடர்ந்து முதல்வர் பேசும்போது, மத்திய அரசு கொண்டு வந்தாலும் அதனை ஏற்றுக் கொள்வதும், ஏற்காததும் மாநில அரசின் உரிமை. எங்களுடைய அரசின் மீது மத்திய அரசு பல நிர்பந்தங்களை கொடுத்தாலும் அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
பிரதமர் தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்போது, புதுச்சேரி மாநிலத்தில் சட்டப்பேரவை உள்ளது. புதுச்சேரியை யூனியன் பிரதேசங்களில் சேர்க்கக்கூடாது. எனவே, மத்திய நிதி குழுவில் புதுச்சேரியை சேர்க்க வேண்டும். அப்போது தான் மற்ற மாநிலங்களுக்கு கிடைக்கக்கூடய 42 சதவீத மானியம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என பிரதமரிடம் வலியுறுத்தினேன்.
கடந்த 2007-ம் ஆண்டு புதுக்கணக்கு தொடங்கியபோது இருந்த கடன் ரூ.3,400 கோடி தள்ளுபடி செய்ய வேண்டும். மற்ற மாநிலங்களுக்கு வழங்குவதைப்போல புதுச்சேரிக்கும் ஆண்டுதோறும் 10 முதல் 15 சதவீதம் வரை நிதியை உயர்த்தி வழங்க வேண்டும் என பிரதமரிடம் கேட்டுள்ளேன்.
புதுச்சேரிக்கு டெல்லியைப் போல வருவாய் இல்லை. 4 ஆயிரம் கோடி வரி மூலம் வருவாய் இருந்தாலும் மீதமுள்ள 3 ஆயிரம் கோடி மத்திய அரசின் மானியம் மற்றும் கடன் மூலம் போடப்படுகிறது. மேலும், அரசு நிலத்தை விற்கக்கூட நமக்கு உரிமை இல்லை. மத்திய உள்துறையிடம் அனுமதி பெற்றுதான் விற்க முடியும்.
நீட் தேர்வில் இருந்து புதுச்சேரிக்கு விலக்கு அளிக்க கேட்டுள்ளேன். அரசானது ஏழை, எளிய மக்களுக்கு 20 கிலோ இலவச அரிசி; வீடு தேடிச்சென்று முதியோர் உதவித்தொகை கொடுப்பது; சென்டாக் பணம் காலத்தோடு கொடுப்பது ஆகியவற்றை உரிய நேரத்தில் வழங்குவதில் முன்னுரிமை கொடுக்கிறது. 7-வது சம்பள கமிஷன் அமல்படுத்தியதால் 500 கோடி கூடுதல் செலவு ஆகிறது. இந்த பணத்தை மத்திய அரசு கொடுக்க வேண்டும். இருந்த போதிலும் அதனை நாங்கள் கொடுக்கிறோம்.
வறட்சி நிவாரணம் கேட்டதால் மத்திய நிபுணர் குழு புதுச்சேரி, காரைக்காலில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். நிதித்துறை அதனை பரிசீலனை செய்து நிதிகொடுக்கும் என நான் நம்புகிறேன். கூட்டுறவு கடன் ரத்து செய்ய கோப்புகள் ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆளுநர் ஒரு சில கேள்விகளை கேட்டுள்ளார். அதற்கு பதில் கொடுத்துள்ளோம்.
கூட்டுறவு வங்கியில் உள்ள கடனை தள்ளுபடி செய்ய மாநில அரசுக்கு உரிமை உண்டு. ஆனால் மற்ற வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனை ரத்து செய்ய உரிமை இல்லை. 20 ஆண்டுகளாக செயல்படாமல் இருந்த இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை பம்ப்செட் விவசாயிகளுக்கு நாங்கள் செயல்படுத்தி உள்ளோம்.
பயிர் காப்பீட்டு திட்டத்தை 100 சதவீதம் விவசா யிகளுக்கு செயல் படுத்தியு ள்ளோம். வரும் ஜுலை மாதம் முதல் விமான சேவை தொடங்கப்படும். புதுச்சேரியின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு வேலை வாய்ப்பை பெருக்குவது, சுற்றுலா வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம்.
சட்ட ரீதியாக எதிர்கொண்டு உள்ளாட்சி தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். சேவை வரி முன்பு மத்திய அரசுக்கு சென்றது. ஜிஎஸ்டி அமல்படுத்திய பிறகு நேரடியாக புதுச்சேரிக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. இதன் மூலம் வருமானத்தை பெருக்க முடியும். நிதிநிலைக்கு ஏற்ப எங்கள் அரசு திட்டங்களை நிறைவேற்றும் என்றார்.