தமிழகம்

குலுமணாலியில் இறந்த தமிழர்கள் 3 பேரின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிவாரண நிதி: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

செய்திப்பிரிவு

மதுரையில் இருந்து குலுமணாலி சுற்றுலா சென்ற போது ஏற்பட்ட விபத்தில் இறந்த 3 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மதுரை மாவட்டம், அண்ணாநகர், தெப்பக்குளம் பகுதிகளைச் சேரந்த் 16 பேர் , இமாசல பிரதேசம் குலுமணாலிக்கு சுற்றுலா சென்றனர். குலுமணாலிக்கு செல்லும் வழியில், பிலாஸ்பூரில் நேற்று முன்தினம் விபத்து ஏற்பட்டது. இதில், கார்த்திகேயன் மனைவி காயத்ரி, சிவசாமியின் மகன் ஜெயராமன், நல்லதம்பியின் மகன் குமார் ஆகியோர் சம்பவ இடத்தில் இறந்தனர்.

இந்த செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். உடனடியாக தமிழக தலைமைச் செயலர் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல அதிகாரிகளை தொடர்பு கொண்டு இறந்தவர்களின் உடல்களை மதுரை கொண்டுவரவும், காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவிகள், அவர்களை தங்க வைக்க ஏற்பாடுகளையும் செய்துள்ளார். இந்த சம்பவத்தில்இறந்தவர்கள் குடும்பங்களுக்கு இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த விபத்தில் 13 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளேன். அவர்கள் விரைவில் பூரண குணமடைந்து வீடுதிரும்ப வவேண்டும்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.1 லட்சம், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.35 ஆயிரம் வழங்கப்படும்'' என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT