சென்னையில் இரு வழித்தடங்களில் மொத்தம் 45 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 19 ரயில் நிலையங்களுடன் 24 கி.மீ. சுரங்க வழிப் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. உயர்த்தப்பட்ட பாதையில் விமான நிலையம் - சின்னமலை - கோயம்பேடு இடையே மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
கோயம்பேடு - நேரு பூங்கா வரையிலான முதலாவது மெட்ரோ ரயில் சுரங்கப் பாதை பணி முடிவடைந்து கடந்த சில மாதங்களாக சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. சுரங்கப் பாதையில் ஆய்வு மேற்கொண்ட தெற்கு மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் கே.ஏ.மனோகரன் மெட்ரோ ரயில்களை இயக்க ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த வழித்தடத்தில் உள்ள திருமங்கலம், அண்ணா நகர் டவர், அண்ணாநகர் கிழக்கு, ஷெனாய் நகர், பச்சையப்பன் கல்லூரி, கீழ்ப்பாக்கம் ஆகிய 6 சுரங்க ரயில் நிலையங்கள், டிக்கெட் கவுன்ட்டர், குடிநீர், கண்காணிப்பு கேமராக்கள், காற்றோட்ட வசதி, தானியங்கி சிக்னல், தீ மற்றும் புகையை அணைத்தல் உள்ளிட்ட சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
இது தொடர்பாக மெட்ரோ ரயில்வே அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘கோயம்பேடு நேரு பூங்கா இடையே மெட்ரோ ரயில் சுரங்கப் பாதையில் பல்வேறு கட்ட ஆய்வுகள் நடத்தி, ரயில்வே பாதுகாப்பு ஆணையரகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த தடத்தில் மெட்ரோ ரயில்கள் இயக்குவது குறித்து மத்திய, மாநில அரசுகளிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, மெட்ரோ ரயில் சேவை விரைவில் தொடங்கும். குறிப்பாக வரும் 13 அல்லது 14-ம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கிறோம். இதில், மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு பங்கேற்கவுள்ளார்’’ என்றனர்.