தமிழகம்

கருணாநிதியின் அரசியல் முதிர்ச்சி ஸ்டாலினிடம் இல்லை: தமிழிசை விமர்சனம்

செய்திப்பிரிவு

அரசியலில் திமுக தலைவர் கருணாநிதிக்கு இருக்கும் முதிர்ச்சி செயல் தலைவர் ஸ்டாலினுக்கு இல்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

சென்னை கே.கே.நகரில் தூய்மை இந்தியா திட்டம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தமிழிசை சவுந்தரராஜன் இன்று தூய்மைப் பணி மேற்கொண்டார்.

அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ''தமிழகத்தில் அரசியல் நாகரிகம் இல்லை. திமுக தலைவர் கருணாநிதியின் முதிர்ச்சியில் ஓரளவுக்காவது ஸ்டாலின் முதிர்ச்சி அடைந்திருப்பார் என்று பார்த்தால், மீண்டும் அவர் பாஜக விளம்பரம் தேடுகிறது என்கிறார்.

மோடியின் கட்சி தமிழகத்தில் விளம்பரம் தேட வேண்டிய அவசியம் இல்லை. இது ஸ்டாலினுக்கும் தெரியும்.

கருணாநிதியின் சட்டப்பேரவை வைரவிழாவை முன்னிட்டு பல கட்சித் தலைவர்களையும் அழைத்திருக்கிறார் ஸ்டாலின்.

லாலு பிரசாத் யாதவ் மீது ரூ.1000 கோடி ஊழல் வழக்கு உள்ளது. அவரை அழைப்பது திமுகவுக்குப் பெருமையாக உள்ளதா?

தமிழக அரசியல் நாகரிகமாக இல்லாமல், அதல பாதாளத்தில் போய்க் கொண்டிருக்கிறது'' என்றார் தமிழிசை.

SCROLL FOR NEXT