ஒரே செட்டாப் பாக்ஸில் கேபிள் டிவி மற்றும் இன்டர்நெட் சேவையை வழங்க அரசு கேபிள் டிவி நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் 70 லட்சம் கேபிள் டிவி வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்நிறுவனத்துக்கு டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமம் கிடைத்துள்ளதைத் தொடர்ந்து, டிஜிட்டல் ஒளிபரப்புக்கு தேவையான செட்டாப் பாக்ஸ்களை கொள்முதல் செய்ய, அரசு கேபிள் நிறுவனம், ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.
உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள், தங்களுக்கு தேவையான எஸ்டி மற்றும் எச்டி செட்டாப் பாக்ஸ்களின் எண்ணிக்கை குறித்து அரசு கேபிள் நிறுவன இணையதளத்தில் பதிவு செய்ய மே 21-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிறுவனம் சார்பில் இணைய சேவையும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 5 ஆயிரம் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
இந்நிலையில், அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கேபிள் டிவி மற்றும் இணையதள சேவை ஆகிய இரு சேவைகளையும் ஒரே செட்டாப் பாக்ஸ் வழியாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அரசு கேபிள் டிவி நிறுவன மேலாண் இயக்குநர் ஜெ.குமரகுருபரன் கூறியதாவது:
நம் நாட்டில் இணையதளத்துக்கு தனி மோடம், தொலைபேசிக்கு தனி கருவி, கேபிள் டிவி பார்க்க தனி கருவி என வைத்திருக்கிறோம். ஆனால் மேலை நாடுகளில், மேற்கூறிய 3 சேவைகளையும் “ட்ரிபிள் பிளே” என்ற ஒரே செட்டாப் பாக்ஸ் மூலமாக பெற்று வருகின்றனர். தற் போது அரசு கேபிள் டிவி நிறுவனத்திடம் கேபிள் டிவி மற்றும் இணைய வசதி உள்ளது. இந்த இரு சேவைகளையும் ஒரே செட்டாப் பாக்ஸ் வழியாக வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
கேபிள் டிவி இணைப்புடன், இணைய சேவையையும் பெற பொதுமக்கள் ஆர்வமாக இருந்தால், அந்த சேவைகளை பெறுவதற்கான “ட்ரிபிள் பிளே” செட்டாப் பாக்ஸ் தேவை குறித்து, வரும் மே 21-ம் தேதிக்குள் அரசு கேபிள் இணையதளத்தில் பதிவு செய்யலாம். அதன் அடிப்படையில் இந்த செட்டாப் பாக்ஸ் கொள்முதல் செய்யப் படும். இந்த புது முயற்சி மூலம், இந்நிறு வனத்தின் இணைய சேவை பெறும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. கேபிள் டிவி சேவைக்கான செட்டாப் பாக்ஸை பொருத்தவரை, 45 லட்சத்துக்கும் அதிக மான பாக்ஸ்கள் கேட்டு, இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.