தாம்பரம்: ரேஷன் கடை பணியாளர்களுக்கு கடந்த 20 ஆண்டுகளாக பதவி உயர்வு இல்லாமல் இருந்து நிலையில், தற்போது பதவி உயர்வு அளிப்பதோடு காலிப்பணியிடங்களையும் நிரப்ப சமீபத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அறிவிப்பு வெளியிட்டார். இருப்பினும் இந்த உத்தரவு இன்னும் அமலுக்கு வராததால் பணியாளர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
தமிழகத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் கீழ் 34,773 ரேஷன் கடைகள் உள்ளன. அதில், மொத்தம் 26,700 பேர் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு கடந்த 20 ஆண்டுகளாக பதவி உயர்வு ௭துவும் அளிக்கப்படவில்லை. இந்நிலையில் 4,000 விற்பனையாளர்கள் மற்றும் எடை அளப்பவர் பணியிடங்களை மாவட்ட ஆள்சேர்ப்பு மையங்கள் மூலம் நிரப்ப முடிவு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் விற்பனையாளர் பணிக்கு பிளஸ் 2-வும், எடை அளப்பவர் பணிக்கு 10-ம் வகுப்பும் கல்வித் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தங்களை பணி நிரந்தரம் செய்த பிறகு காலி பணியிடங்களுக்கு புதிதாக ஆட்களை தேர்வு செய்ய வேண்டும் என தற்போதைய பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் சமீபத்தில் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். அதில், 10-ம்வகுப்பு தேர்ச்சி பெற்ற எடை அளப்பவர்களுக்கு விற்பனையாளர் பதவி உயர்வும் பிளஸ் 2 வகுப்பு தேர்ச்சி பெற்ற விற்பனையாளர்களுக்கு அலுவலக எழுத்தாளர் பதவியும் வழங்கி, காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர்கள், இளநிலை எழுத்தர், உர விற்பனையாளர் பணியிடங்களில், ரேஷன் கடையில் பணிபுரிந்து வரும் விற்பனையாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கலாம். அதேபோல் எடை அளப்பவர்களை விற்பனையாளர்களாக பதவி உயர்வு அளிக்கலாம்.
மேலும், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் நியாய விலை கடைகளை நடத்தி வரும் ஒவ்வொரு சங்கமும் விதிகளில் திருத்தம் செய்து நிர்வாக குழுவில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் அறிவுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ரேஷன் பணியாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
இதுகுறித்து ரேஷன் கடை பணியாளர்கள் சங்க மாநில பொது செயலாளர் பா.தினேஷ் குமார் கூறியதாவது: இந்த உத்தரவு இன்னும் நடைமுறைப்படுத்தவில்லை. கூட்டுறவு சங்க பதிவாளர்கள் இதற்கான தீர்மானத்தை இன்னும் நிறைவேற்றாமல் உள்ளனர். இவற்றை விரைந்து நடைமுறைப்படுத்த கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் புதிய காலி பணியிடங்களை நிரப்புவதற்குள் பணியாளர்களுக்கு அயல் பணி சம்பந்தமாக மாவட்டங்களுக்கிடையே மாறுதல் வழங்குவதில் உள்ள சீனியாரிட்டி தவிர்ப்பு உள்ளிட்ட பாதகமான சூழ்நிலைகளை திருத்த வேண்டும். மேலும் மண்டல இணைப்பதிவாளருக்கு முழு அதிகாரம் வழங்கி மாவட்டங்களுக்கிடையே மாறுதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.