சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று அவர் விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: சுயமரியாதை இயக்கத்தில் தனது அரசியல் பயணத்தைத்தொடங்கிய சத்தியவாணி முத்து, 1949-ல் திமுக ஆரம்பித்த காலத்திலிருந்தே அக்கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார்.
1957, 1967, 1971 தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர்தான், சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திராவிட இயக்கத்தைச் சேர்ந்த முதல்பெண்மணி. அண்ணா, கருணாநிதியின் அமைச்சரவையில் அமைச்சராகப் பொறுப்பேற்ற முதல் பெண்மணியும் இவர்தான்.
தொடர்ந்து 1979-ம் ஆண்டு சரண்சிங் பிரதமராக இருந்தபோது மத்திய அமைச்சராகப் பொறுப்பேற்ற தமிழகத்தைச் சேர்ந்த முதல் பெண்மணியும் இவரே. இந்தித் திணிப்புக்கு எதிராக போராடி சிறை சென்றவர்.
ஆதிதிராவிட மக்களுடைய கல்வி மேம்பாட்டுக்காகவும், பெண்களின் முன்னேற்றத்துக்காகவும் பாடுபட்டவர். இத்தகைய பல்வேறு பெருமைகளைக் கொண்ட சத்தியவாணி முத்துவின் பிறந்தநாள் நூற்றாண்டு வரும் 15-ம்தேதியாகும். அவரது பங்களிப்பை உரிய வகையில் அங்கீகரித்து, நூற்றாண்டை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும். மேலும், தமிழகத்தில் ஒரு மகளிர் கல்லூரிக்கு அவரது பெயரைச் சூட்ட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.