புதுச்சேரி: மருத்துவத்துறையின் வளர்ச்சி, உயர் மருத்துவ தொழில்நுட்பம் சாதாரண மக்களைச் சென்றடைவது அவசியம் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.
18-வது தேசிய குழந்தை நல மருத்துவ அறுவை சிகிச்சை நிபுணர்களின் வருடாந்திர மாநாடு புதுவை ஜிப்மர் மருத்துவமனை கலையரங்கத்தில் நேற்று நடந் தது. ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வால் வரவேற்றார். மாநாட்டை துணை நிலை ஆளுநர் தமிழிசை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். மாநாட்டு சங்கத் தலைவர் டாக்டர் ரமேஷ், செயலர் டாக்டர் நிவாஸ் ராவ் மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் இம்மாநாட்டில் பங் கேற்றனர்.
மாநாட்டில் துணைநிலை ஆளுநர் தமிழிசை பேசியதாவது: ஒரு துறை சார்ந்த அறிவையும், அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ள கருத்தரங்குகள் உதவும். பிரதமரின் ஊக்கத்தோடு, ‘ஆத்ம நிர்பர் பாரத்‘, ‘ஸ்டார்ட் ஆப் இந்தியா’ போன்ற திட்டங்களால் மருத்துவ கருவிகள் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன.
முன்பெல்லாம் இயந்திரங்களை மருத்துவத்துக்காக வாங்கி விட்டு, சிறு உதிரி பாகங்களுக்காக பல வாரங்கள் காத்திருக்கும் சூழல் இருந்தது. தற்போது அது மாறியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கருவிகள் தற்போது இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது.
‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டத்தால் 40 கோடிக்கும் மேலான மக்கள் பயன் பெற உள்ளனர். பட்ஜெட்டிலும், மருத்துவத் துறைக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. கரோனாவிற்கு, நம் நாட்டிலேயே உற்பத்தியான தடுப்பூசியை எடுத்துக் கொண்டேன் என்பதில் மருத்துவத் துறையை சேர்ந்தவர் என்ற வகையில் நான் பெருமைப்படுகிறேன்.
அரசு மருத்துவமனைகளை மேம்படுத்த புதுவை அரசு கவனம் செலுத்தி வருகிறது. மருத்துவத் துறையின் வளர்ச்சிகளும், தொழில் நுட்பங்களும் சாதாரண மக்களை சென்றடைவது அவசியம். இது பற்றிய விழிப்புணர்வை மக் களிடையே ஏற்படுத்த வேண்டும்.
தொழில்நுட்பத்திற்கும், மக்களு டைய புரிதலுக்கும் இடையிலான ஒரு சமநிலையை மருத்துவர்கள் கடைபிடிக்க வேண்டும். மருத்துவ தொழிலை பழகுவது என்பது இன்றைய காலத்தில் மிகவும் சவாலான ஒன்று. இந்த துறையில் இன்னும் பல்வேறு ஆராய்ச்சிகளை தொடர வேண்டும். ஆராய்ச்சிகளும், கண்டுபிடிப்புகளும் மக்களுக்கு பயன்படும் என்று தெரிவித்தார்.