எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வில் சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்கள் 93.1 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 20 மாநகராட்சி பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. 189 மாணவ, மாணவிகள் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
சென்னை மாநகராட்சியின் 70 பள்ளிகளில் இருந்து 6,302 மாணவர்கள் 10-ம் வகுப்பு தேர்வு எழுதி இருந்தனர். தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. அதில் 5,865 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 93.1 சதவீத தேர்ச்சி ஆகும். கடந்த ஆண்டு 94.9 சதவீதமாக இருந்த தேர்ச்சி விகிதம் தற்போது 1.8 சதவீதம் குறைந்துள் ளது. இத்தேர்வில் மாணவர்களைவிட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ள னர். மாணவர்கள் 88.97 சதவீதமும், மாணவிகள் 96.85 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 20 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. கடந்த ஆண்டில் 19 பள்ளிகள் இந்த சாதனையை படைத்தன.
பல்வேறு பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டைவிட அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் 78 ஆக இருந்த இந்த எண்ணிக்கை தற்போது 111 ஆக உயர்ந்துள்ளது. 189 மாணவ, மாணவிகள் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 249 பேர் 450-க்கு மேல் மதிப்பெண் பெற்றனர். தற்போது இந்த எண்ணிக்கை 312 ஆக உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு 494 பேர் உயர் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
100 சதவீத தேர்ச்சி அளித்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களை சென்னை மாநகராட்சி துணை ஆணையர் (கல்வி) கோவிந்தராவ் பாராட்டி பரிசு வழங்கினார்.
ஜாபர்கான்பேட்டை சென்னை உயர் நிலைப் பள்ளி தொடர்ந்து 5-வது ஆண்டாக 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. இதுகுறித்து அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் வ.முனியன் கூறியபோது, ‘‘தேர்வு எழுதிய எங்கள் பள்ளி மாணவர்கள் 52 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தொடர்ந்து 5-வது ஆண்டாக 100 சதவீத தேர்ச்சியைப் பெற்றுள்ளோம். காலை, மாலை வேளைகளிலும், விடுமுறை நாட்களிலும் தொடர் பயிற்சி, மாணவர்கள், ஆசிரியர்களின் ஒத்துழைப்பு, மாநகராட்சி கல்வித் துறை உயரதிகாரிகளின் கண்காணிப்பு ஆகியவையே இந்த தொடர் சாதனைக்கு காரணம்’’ என்றார்.
100 சதவீத தேர்ச்சி வழங்கிய பள்ளி களிலேயே அதிக தேர்வர்களை (145) கொண்டது பெரம்பூர் மார்க்கெட் தெருவில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி. இப்பள்ளியின் தலைமை ஆசிரியை டி.தைரியலட்சுமி கூறியதாவது:
முதலில், மாணவிகளுக்கு இருக்கும் வீட்டு பிரச்சினைகள், கல்வி கற்பதில் உள்ள பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்து, மனதளவில் அவர்களை தயார்படுத்தினோம். பெற்றோரையும் வரவழைத்து ஆலோசனை வழங்கினோம்.
பள்ளியின் ஒவ்வொரு மாணவியைப் பற்றிய முழு விவரங்களும் ஆசிரியர் களுக்குத் தெரியும். அந்த அளவுக்கு அக்கறையுடன் செயல்பட்டனர். காலை, மாலை இரு வேளைகளும் மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. மாநகராட்சி சார்பில் காலை உணவும் வழங்கப்பட்டது. இப்பயிற்சிகளை மாநகராட்சி துணை ஆணையர் வாட்ஸ்அப் மூலமாக தொடர்ந்து கண்காணித்தார். இதனால், 10-ம் வகுப்பு மட்டுமின்றி பிளஸ் 2 பொதுத் தேர்விலும் எங்கள் பள்ளியால் 100 சதவீத தேர்ச்சி பெற முடிந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.