டிடிவி தினகரன் | கோப்புப் படம் 
தமிழகம்

பழனிசாமியால் இரட்டை இலை சின்னம் செல்வாக்கு இழந்து விட்டது: டிடிவி.தினகரன்

செய்திப்பிரிவு

தஞ்சாவூர்: பழனிசாமியால் இரட்டை இலை சின்னம் செல்வாக்கு இழந்து விட்டது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்தார்.

தஞ்சாவூரில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஈரோடு இடைத்தேர்தலில் எங்களுக்கு குக்கர் சின்னம் கிடையாது என பிப்.7-ம் தேதி தான் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. முன்கூட்டியே கூறியிருந்தால் உச்ச நீதிமன்றம் சென்று அனுமதி வாங்கி இருப்போம். ஆனால் அதற்கான கால அவகாசம் இல்லாததால் இடைத்தேர்தலில் அமமுக போட்டியிடவில்லை.

இருப்பினும் மக்களவைத் தேர்தலில் கண்டிப்பாக குக்கர் சின்னம் பெற்று போட்டியிடுவோம். இந்த இடைத்தேர்தலில் திமுக மற்றும் பழனிசாமி அணிக்கு எதிராக அமமுகவினர் தங்களது வாக்கை பதிவு செய்வார்கள். பழனிசாமி அணிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கினாலும், தற்போது அந்த சின்னம் செல்வாக்கு இழந்ததாகவே கருதப்படுகிறது.

அவர்களால் இடைத்தேர்தலில் வெற்றி பெற முடியாது. தமிழக அரசு நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவாக கடலில் பேனா சிலை தேவையா என பலரும் குரல் எழுப்புகிறார்கள். கருணாநிதியின் நினைவிடத்திலோ அல்லது அறிவாலயத்திலோ திமுக கட்சி நிதியில் பேனா சிலை வைத்தால் யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது, கட்சியின் துணை பொதுச் செயலாளர் எம்.ரங்கசாமி, தஞ்சாவூர் தெற்கு மாவட்டச் செயலாளர் மா.சேகர் மற்றும் பலர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT