பிரதிநிதித்துவப் படம் 
தமிழகம்

திருமங்கலம் பேச்சி விருமன் கோயிலை திறக்க உத்தரவு

செய்திப்பிரிவு

மதுரை: மதுரை மாவட்டம், திருமங்கலம் தாலுகா எம்.பெருமாள்பட்டியைச் சேர்ந்த செல்வகுமார், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: திருமங்கலம் தாலுகா மதிப்பனூர் எம்.பெருமாள்பட்டியில் பேச்சி விருமன் கோயில் உள்ளது.

இந்த கிராம கோயிலில் யார் பூஜை வைப்பது என்பதில் பிரச்சினை உள்ளது. இப்பிரச்சினையால் கிராம கோயிலை திருமங்கலம் வட்டாட்சியர் பூட்டியுள்ளார். இது சட்டவிரோதம். கோயிலை திறந்து பக்தர்கள் வழிபாட்டுக்கு அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: கிராம கோயிலில் யார் பூசாரியாக செயல்படுவது என்பது இருவருக்கு இடையிலான பிரச்சினை. இதற்கு இந்த மனுவில் தீர்வு வழங்க முடியாது. வருவாய் அதிகாரிகளும், போலீஸாரும் தான் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும்.

இந்த பிரச்சினையால் கோயிலை பூட்டக்கூடாது. பொது வழிபாட்டுக்காக கோயிலை திறந்து வைக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கலாம் என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT