உத்தமபாளையம்: பல்லவராயன்பட்டியில் பிப்.15-ல் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற உள்ளதையொட்டி மாடுபிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர்கள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே பல்லவராயன்பட்டியில் வல்லடிக்கார சுவாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழாவை முன்னிட்டு வரும் 15-ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இதற்காக மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகள் குறித்த விவரங்களை https://theni.nic.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மாடுபிடி வீரர்கள் தங்களது புகைப்படம், வயது சான்றிதழ், கரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று ஆகியவற்றுடன் பதிவேற்றம் செய்ய வேண்டும். மாட்டின் உரிமையாளர்கள், தங்களின் புகைப்படம், காளையின் உடல் தகுதிச் சான்று ஆகியவற்றை பதிவேற்ற வேண்டும். இத்தகவல்களை வரும் 11ம் தேதி இரவு 8 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும்.
காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களின் எண்ணிக்கை அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமாக இருந்தால் கணினி குலுக்கல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் என்று ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா தெரிவித்துள்ளார்.