தமிழகம்

மவுலிவாக்கம் கட்டிட விபத்து: சிபிஐ விசாரணை தேவையில்லை

செய்திப்பிரிவு

மவுலிவாக்கம் கட்டிட விபத்தில் சிஎம்டிஏ-வுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. எனவே, இதுதொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டிய அவசியம் இல்லை என்று சட்டசபையில் அமைச்சர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

சட்டசபையில் வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீது வியாழக்கிழமை நடந்த விவாதம்:

பீம்ராவ் (மார்க்சிஸ்ட்): மவுலிவாக்கம் கட்டிட விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். கட்டிடம் கட்டுவதற்கு முன்பு உரிய சோதனைகள் மேற்கொள்ளப்பட்டனவா என்பதைப் பற்றி விசாரிக்க வேண்டும்.

அமைச்சர் வைத்திலிங்கம்: ஒரு பன்னடுக்கு கட்டிடத்துக்கு திட்ட அனுமதி தருவதுதான் சிஎம்டிஏ-வின் பொறுப்பு. ஒரு கட்டிடத்தின் ஸ்திரத்தன்மையைப் பற்றி அதைக் கட்டும் உரிமையாளர், ஆர்கிடெக்ட் மற்றும் கட்டிட அமைப்பு வல்லுநர் ஆகியோர் அதற்கு பொறுப்பேற்று கையெழுத்து போட்டுக் கொடுப்பார்கள். அதன்படி, திட்ட அனுமதி கோரி விண்ணப்பிக்கும்போது, மவுலிவாக்கம் கட்டிடம் தொடர்புடையவர்கள் அனைவரும் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துள்ளனர்.

மவுலிவாக்கம் கட்டிட அனுமதியைப் பொறுத்தவரை பக்கவாட்டு அளவு, தரை தளக் குறியீடு, சாலையின் அகலம் போன்ற அனைத்து அம்சங்களிலும் விதிமீறல் எதுவும் இல்லை. இதில் சிஎம்டிஏ-வின் தவறு எதுவும் இல்லை.

அமைச்சர் நத்தம் விசுவநாதன்: கட்டிட விபத்துக்கான காரணத்தை அறிவதற்காக விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. அதுபற்றி விவாதிக்கக் கூடாது. எனினும், ஒரு தனியார் கட்டிடம் இடிந்ததற்கு அரசு எப்படி பொறுப்பாகும்? கட்டிடத்துக்கு திட்ட அனுமதி தருவது மட்டுமே அதன் பணி. ஒரு தனியார் கட்டிடம் உறுதியாகக் கட்டப்படுகிறதா என்பதை ஆராய்வது அதன் பணியல்ல.

அது அந்தக் கட்டிட உரிமையாளரின் பொறுப்பு. கடந்த திமுக ஆட்சியில் கோவையில் குடிசை மாற்று வாரியக் கட்டிடத்தில் பிரச்சினை ஏற்பட்டது. அது அரசு கட்டிடம். அதனால் அப்போது அரசிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதுவோ, தனியார் கட்டிடம். இப்பிரச்சினையில் அரசை பொறுப்பாக்க முடியாது. அதனால். சிபிஐ விசாரணை தேவையில்லை. எதிர்க்கட்சிகளுக்கு அரசியல் செய்ய வழியில்லை.

தேர்தலில் அவமானகரமான தோல்வியடைந் ததை மறைத்து, மக்களை திசை திருப்பவே இப்பிரச்சினையை கையில் எடுத்துள்ளனர்.

பாலபாரதி (மார்க்சிஸ்ட்): அப்படியெனில் விபத்து நடந்த இடத்துக்கு ஏன் முதல்வர் போனார்?

அமைச்சர் நத்தம் விசுவநாதன்: விபத்து நடந்தால் அது தனியார் இடமா அல்லது அரசு இடமா என்று பார்ப்பதில்லை. மனிதாபிமானத்தோடு அங்கு சென்று தேவையான உதவிகளைச் செய்வது அரசின் கடமை.

அமைச்சர் வைத்திலிங்கம்: முதல்வரை பற்றி பாலபாரதி சொன்னதை வாபஸ் பெறவேண்டும். சிஎம்டிஏ வளர்ச்சி விதிப்படி தனியார் கட்டிடத்துக்கு அரசு பொறுப்பேற்க முடியாது. எனவே விபத்துக்கு அரசு காரணம் என்பது தவறு. 4 ஆயிரம் சதுர அடிக்கு உட்பட்ட இடங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகள் கட்டிட அனுமதி வழங்குகின்றன. அங்கு தனியார் கட்டிடங்கள் இடிந்து விழுந்தால் பஞ்சாயத்து தலைவர் பொறுப்பாக முடியாது.

அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்: எந்த விபத்து நடந்தாலும் அங்கு செல்ல வேண்டியது முதல்வரின் பொறுப்பு. பாலபாரதியின் கருத்து வருத்தம் அளிக்கிறது.

SCROLL FOR NEXT