தமிழகம்

மாதத்துக்கு 6 பள்ளிகளை ஆய்வு செய்ய வேண்டும்: கல்வி அதிகாரிகளுக்கு இயக்குநர் உத்தரவு

செய்திப்பிரிவு

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மாதந்தோறும் சார்நிலை அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளை ஆய்வு செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து, பள்ளிக் கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மாதந்தோறும் சார்நிலை அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளை ஆய்வு செய்ய வேண்டும். இதன்படி, வரும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தலா 6 பள்ளிகளையும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் தலா 5 பள்ளிகளையும், செப்டம்பர், டிசம்பர் மற்றும் 2018-ம் ஆண்டு பிப்ரவரி ஆகிய மாதங்களில் தலா 2 பள்ளிகளையும், 2018 ஜனவரி மாதத்தில் 4 பள்ளிகளையும் ஆய்வு செய்ய வேண்டும். செவ்வாய், வியாழக்கிழமைகளில் இந்த ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். 2 ஆண்டுகளுக்கு மேல் ஆண்டாய்வு மேற்கொள்ளப்படாத மேல்நிலைப் பள்ளிகளை முன்னுரிமை கொடுத்து ஆய்வுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்த ஆய்வின்போது முதன்மைக் கல்வி அலு வலர் நாள் முழுவதும் பள்ளியிலேயே இருந்து, அனைத்து வகுப்புகளி லும் கற்றல், கற்பித்தல் நிகழ்வுகளைப் பார்வை யிட வேண்டும். மாண வர்கள், ஆசிரியர்களுடன் கலந்துரையாடி, பள்ளி யின் அனைத்துக் கூறு களையும் துல்லியமாக ஆய்வு செய்ய வேண்டும்.

மாணவர்கள், ஆசிரியர்களின் வருகைப் பதிவேட்டையும் ஆய்வு செய்ய வேண்டும். குறைந்தது 10 நாட்களுக்கு மேல் பள்ளிக்கு வராத மாணவர்களைக் கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும். நீண்ட விடுப்பில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் அடிக்கடி விடுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பள்ளி வளாகத்தில் திறந்தவெளிக் கிணறுகள், உயர் அழுத்த மின்கம்பங்கள், பழுதடைந்த கட்டிடங்கள் போன்றவை ஆய்வின்போது கண்டறியப்பட்டால் அவற்றை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு நலத்திட்டங்கள் அனைத்து மாணவர்களுக்கும் சென்றடைந்து விட்டதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

சார்நிலை அலுவலகங்களில் ஆய்வுக்கு செல்லும்போது அனைத்துப் பிரிவுகளிலும் தன்பதிவேடு, முன்கொணர் தன்பதிவேடு, ஆய்வுக் குறிப்பேடு, நினைவூட்டுக் குறிப் பேடு, இருப்புக் கோப்பு ஆகியன முறையாக பராமரிக்கப் பட்டு மாதந்தோறும் அலுவலரின் பார்வைக்கு சமர்ப்பிக்கப் பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். ஆய்வு அறிக்கைகளை மாதம்தோறும் பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT