உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு உட்பட்ட 13 மாவட்டங்களில் 150 கிராமங்களில் கோயில் விழாவின்போது நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
தமிழகம் முழுவதும் கிராமக் கோயில்களில் நடைபெறும் விழாவின்போது நடத்தப்படும் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாச நடனங்கள் இடம்பெறுவ தாக புகார் எழுந்தது. இதனால் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த போலீ ஸார் அனுமதி மறுத்து வருகின் றனர். இதற்கு எதிராக சிலர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு நிபந்தனைகளுடன் அனுமதி பெறுகின்றனர். ஆனாலும் போலீஸார் இதை பொது உத்தரவாக கருதாமல் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உத்தரவு பெற்று வருமாறு, கோயில் விழாக் குழுவினரிடம் போலீஸார் கூறுகின்றனர். இத னால் ஆடல், பாடலுக்கு அனுமதி கேட்டு உயர் நீதிமன்ற கிளையில் வழக்குகள் குவிந்து வருகின்றன.
இந்த வாரத்தில் உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு உட்பட்ட 13 மாவட்டங்களில் 169 கிராமங்களில் இருந்து கோயில் விழாவில் ஆடல், பாடலுக்கு அனுமதி வழங்க போலீஸாருக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதிகள் டி.ராஜா, பி.வேல்முருகன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தன. மனுக்களை விசாரித்த நீதிபதிகள், 150 கிராமங்களில் நிபந்தனைகளை பின்பற்றி ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டனர்.
இதேபோல, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.ராஜா, தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த கே.மாரியப்பன் உள்ளிட்ட 10 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்களில், ‘சித்திரை திருவிழாவை முன்னிட்டு கோயில் திருவிழாக்களில் ஆடல், பாடல் போன்ற கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்க போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த விடுமுறைக் கால நீதிபதி கே.கல்யாணசுந்தரம், ‘‘கோயில் திருவிழாவுக்காக இசை, நடன நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கலாம். மாலை 6 முதல் இரவு 11 வரை மட்டுமே அனுமதிக்க வேண்டும். ஆபாச நடனங்கள் கூடாது. நிபந்தனைகளை மீறினால், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்’’ என உத்தரவிட்டார்.