தமிழக அரசின் தொழில்துறை மற்றும் இந்திய மின்னணு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் சென்னை வர்த்தக மையத்தில் வரும் பிப்.13,14 ஆகிய தினங்களில் நடைபெறும் ‘12 வது சோர்ஸ் இந்தியா’ கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் குறித்து தமிழக தொழில்துறை செயலர் ச.கிருஷ்ணன் விளக்கினார். உடன், தமிழக அரசின் வழிகாட்டி நிறுவன மேலாண் இயக்குநர் விஷ்ணு வேணுகோபாலன் மற்றும் இந்திய மின்னணு உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள். படம்: பு.க.பிரவீன் 
தமிழகம்

சென்னையில் ‘சோர்ஸ் இந்தியா’ கண்காட்சி, கருத்தரங்கம் - பிப். 13, 14-ம் தேதிகளில் நடைபெறும் என தொழில் துறைச் செயலர் தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக அரசின் தொழில் துறை மற்றும் இந்திய மின்னணுவியல் சங்கம் (எல்சினா) சார்பில் சென்னை வர்த்தக மையத்தில் வரும் 13, 14-ம்தேதிகளில் ‘சோர்ஸ் இந்தியா’ என்ற கண்காட்சி, கருத்தரங்கம் நடைபெறுகிறது.

இது தொடர்பாக தமிழக தொழில்துறைச் செயலர் ச.கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கரோனா பாதிப்புகளைக் கடந்து, 3 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தக் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதில், தைவான், ஜப்பான், கொரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்கின்றன.

தமிழகத்தைப் பொறுத்தவரை, மின்னணுப் பொருட்கள் உற்பத்தி அதிக அளவில் நடைபெறுகிறது. நாட்டின் மின்னணு உற்பத்தியில் 20 சதவீத பங்களிப்பை தமிழகம் வழங்குகிறது. கடந்த 5 ஆண்டுகளில் கூடுதலாக 14 சதவீதம் அளவுக்கு தொழில் துறையில், மின்னணுத் துறை வளர்ந்துள்ளது. தற்போது, கணினி மற்றும் மின்னணுப் பொருட்கள் உற்பத்தியில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. மேலும்,மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியில் தமிழகம் 3-வது இடத்தை வகிக்கிறது. மிகவும் வளர்ந்துவரும் மின்னணுத் தொழில் துறையினருக்கு, தமிழக அரசுபல்வேறு சலுகை, உதவிகளை வழங்கி வருகிறது.

கடந்த 2020-ம் ஆண்டு மின்னணு வன்பொருள் கொள்கை மற்றும் 2021-ம் ஆண்டு திருத்தப்பட்ட தொழில் கொள்கை ஆகியவை வெளியிடப்பட்டுள்ளன. இவை மின்னணுப் பொருட்கள் உற்பத்தி நிறுவனங்களுக்கு, எந்த உற்பத்தியை முன்னெடுப்பது என்பதற்கான ஆலோசனைகளையும், வாய்ப்புகளையும் வழங்குகின்றன.

தமிழகத்தில் மின்னணுப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் பெரும்பாலும் ஸ்ரீபெரும்புதூரைச் சுற்றியே இருந்த நிலையில், தற்போது கோவை, திருச்சி மற்றும் தென்மாவட்டங்களை நோக்கி மின்னணுப் பொருட்கள் தயாரிப்பு விரிவடைந்து வருகிறது. இதற்கு மிக முக்கியமான காரணம் மனித வளமாகும். இளைஞர்களுக்கு இந்த நிறுவனங்கள் அதிக அளவில் வேலைவாய்ப்புகளை வழங்கி வருகின்றன. மேலும், மின்னணு வடிவமைப்பியல் துறையில் கல்வித் தகுதி அதிகம் பெற்றுள்ள, குறிப்பாக ஆராய்ச்சிப் படிப்புகள், முதுநிலை பொறியியல் படித்தவர்களுக்கு அதிக அளவில் பணிவாய்ப்பு கிடைக்கிறது. இதன் மூலம்,ஆண், பெண் இருபாலரும் இத்துறையில் அதிக வேலைவாய்ப்பை பெறுகின்றனர்.

மேலும், தமிழகத்தில் செமிகண்டக்டர் தயாரிக்க முன்வரும் நிறுவனங்களுக்குத் தேவையான சலுகைகள் வழங்க தமிழக அரசு தயாராக உள்ளது. தமிழகத்தை மின்னணு வன்பொருட்கள் உற்பத்திமையமாக உருவாக்க பல்வேறு முயற்சியை எடுக்கப்பட்டு வருகின்றன.

இதுதவிர, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், கும்மிடிப்பூண்டி அடுத்த மாநல்லூர் பகுதிகளில் மின்னணு தொழில் தொகுப்புஅமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஒசூரில் கூடுதல் நிலங்கள் கண்டறியப்பட்டு,அவற்றைக் கையகப்படுத்தும்நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. கோவையிலும் தொகுப்பு உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகம் மின்னணு தொழில் துறையில் முதலிடம் பெற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.ஏற்றுமதி நிறுவன மேலாண் இயக்குனர் விஷ்ணு வேணுகோபால் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT