தமிழக சமூகநலத் துறை சார்பில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ், மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கும் புதுமைப் பெண் 2-ம் கட்ட திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கிவைத்து, 10 மாணவிகளுக்கு வங்கி டெபிட்கார்டுகளை வழங்கினார். அமைச்சர்கள் பொன்முடி, கீதா ஜீவன், சா.மு.நாசர், சமூகநலத் துறை செயலர் சுன்சோங்கம் ஜடக் சிரு, துறை இயக்குநர் ரத்னா, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
தமிழகம்

1.04 லட்சம் மாணவிகள் பயன்பெறும் வகையில் புதுமைப் பெண் 2-ம் கட்ட திட்டம்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கினார்

செய்திப்பிரிவு

திருவள்ளூர்: ‘புதுமைப் பெண்’ 2-ம் கட்டத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன் முதல்கட்டத் திட்டத்தில் 1.16 லட்சம் மாணவிகள் பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தால், படிப்பை பாதியில் நிறுத்தும் நிலையில் இருந்த 12 ஆயிரம் பேர் படிப்பை தொடர்கின்றனர். உயர்கல்வியை கைவிட்ட 10,146 பேர் உயர்கல்வி பயிலத் தொடங்கியுள்ளனர் என்று முதல்வர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

தமிழக சமூகநலத் துறை சார்பில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து, உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கும் ‘புதுமைப் பெண்’ திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆண்டு செப்.5-ம் தேதி தொடங்கி வைத்தார்.

இந்நிலையில், மேலும் 1.04 லட்சம் மாணவிகள் பயன்பெறும் வகையில் ‘புதுமைப் பெண்’ 2-ம் கட்டத் திட்டத்தை திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த பட்டாபிராம் இந்துக் கல்லூரியில் முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

விழாவில் அவர் பேசியதாவது: கல்வியை பலருக்கும் எட்டாக்கனியாக சிலர் மாற்றி வைத்திருந்த காலத்தில், தருமமூர்த்தி ராவ்பகதூர் கலவல கண்ணன் செட்டி, சென்னையில் பல இடங்களில் பள்ளிகளை நிறுவினார். பெண் கல்விக்கு 150 ஆண்டுகளுக்கு முன்பே முக்கியத்துவம் தந்த தருமமூர்த்தி கண்ணன் பெயரால் அமைந்த இந்த கல்லூரியில் புதுமைப் பெண் 2-ம் கட்டதிட்ட தொடக்க விழா நடப்பது பொருத்தமானது.

ஒரு நாடு செழித்து தன்னிறைவுடன் திகழ, நாட்டில் பெண்கள் கல்வியறிவு பெற்றவர்களாக இருப்பது அவசியம். அக்காலத்தில் மூடநம்பிக்கை காரணமாக முடக்கப்பட்டிருந்த பெண்களுக்கு உரிமைக் கதவை திறந்தவர் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார். அவர் பிறந்தபோது, குடும்பம் மிகவும் வறுமையில் இருந்துள்ளது. அதனால், அவரது தாய், அவரை பத்து ரூபாய்க்கு விற்றுவிட்டார். பத்து ரூபாய்க்கு விற்கப்பட்ட ராமாமிர்தம்அம்மையாரின் பெயரால், பல்லாயிரக்கணக்கான பெண் பிள்ளைகள் மாதம்தோறும் ரூ.1,000 பெறக்கூடிய அற்புதமான திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

கடந்த 5 மாதங்களில் ரூ.69.44 கோடி: இதன் முதல்கட்ட திட்டத்தில், இதுவரை 1.16 லட்சம் மாணவிகள் பயனடைந்துள்ளனர். இதற்காக கடந்த 5 மாதங்களில் அரசு சார்பில் ரூ.69.44 கோடி வழங்கப்பட்டுள்ளது. குடும்ப பொருளாதார சூழலால், படிப்பை பாதியில் நிறுத்தும் நிலையில் இருந்த 12 ஆயிரம் மாணவிகள் படிப்பை தொடர்வதும், கடந்த 5 ஆண்டுகளில் பள்ளிப் படிப்பை முடித்து, உயர்கல்வியை தொடர முடியாமல் கைவிட்ட 10,146 மாணவிகள் உயர்கல்வி பயிலத் தொடங்கியிருப்பதும் இத்திட்டத்தின் வெற்றிக்கு சான்று. இதன்மூலம், தமிழகத்தின் கல்வி வளர்ச்சி அதிகமாகும். படித்தவர் எண்ணிக்கை அதிகரிக்கும்.

இதுபோல மேலும் பல உதவிகளை செய்துதர திட்டமிட்டுள்ளோம் எனவே, நன்கு படியுங்கள், உயர்கல்வி படித்து, ஏதாவது ஒரு பாடத்தில் ஆராய்ச்சி செய்யுங்கள். திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

கவனச் சிதறல் வேண்டாம்: திருமணத்துக்கு பிறகும், வீட்டுக்குள்ளேயே இருந்துவிடாமல், வாழ்நாள் முழுவதும் உங்களுக்கென தனித்த அடையாளத்துடன் திகழ வேண்டும். படிக்கும் காலத்தில் கவனச் சிதறல் வேண்டாம். படிப்புக்கும், உயர்வுக்கும் கல்லூரிக் காலத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என ஒரு தந்தையாக உங்களை கேட்டுக் கொள்கிறேன்.

அறிவித்த திட்டங்கள் மட்டுமின்றி, அறிவிக்காத திட்டங்களும் நிறைவேற்றப்படுகின்றன. அதில் ஒன்றுதான் புதுமைப் பெண் திட்டம். தேர்தல் அறிக்கையில் அறிவித்ததில் இதுவரை 85 சதவீதத்துக்கு மேல்நிறைவேற்றி உள்ளோம். எஞ்சிய திட்டங்களும் முழுமையாக நிறைவேற்றப்படும்.

இவ்வாறு முதல்வர் பேசினார்.

இந்த விழாவில், உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், எம்எல்ஏக்கள் கிருஷ்ணசாமி, துரை சந்திரசேகர், சமூகநலத் துறை செயலர் சுன்சோங்கம்ஜடக் சிரு, துறை இயக்குநர் ரத்னா, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான்வர்கீஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT