ஈரோடு கிழக்கு தொகுதி 42-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அங்குள்ள டீக்கடையில் டீ போட்டு கொடுத்து வாக்கு சேகரித்தார். 
தமிழகம்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் முதல் தலைமுறை வாக்காளர்கள் அதிமுகவுக்கு வாக்களிப்பர்: ஆர்.பி.உதயகுமார் நம்பிக்கை

செய்திப்பிரிவு

ஈரோடு: மடிக்கணினி திட்டத்தை திமுக அரசு ரத்து செய்ததால், முதல் தலைமுறை வாக்காளர்கள் அதிமுகவுக்கு வாக்களிக்கத் தயாராகி விட்டனர், என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவை ஆதரித்து, 42-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று வாக்கு சேகரித்தார். வீடு, வீடாகச் சென்று துண்டுப் பிரசுரங்களை வழங்கியும், அப்பகுதியில் உள்ள டீக்கடையில் டீ போட்டுக் கொடுத்தும், துணிகளை அயர்ன் செய்து கொடுத்தும் வாக்கு சேகரித்தார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இடைத்தேர்தலை, பண பலம், அதிகார பலத்தைக் கொண்டு ஆளுங்கட்சி சந்திக்கிறது. சத்தியத்தையும், உண்மையையும் சொல்லி நாங்கள் மக்களைச் சந்தித்து வருகிறோம். மின் கட்டணம், சொத்துவரி உயர்வு, பால் விலை உயர்வு உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் திமுக அரசின் மீது கோபமாக உள்ளனர்.

தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட மடிக்கணினி திட்டத்தை ரத்து செய்து விட்டனர். இதனால், முதல் தலைமுறை வாக்காளர்கள் அதிமுகவுக்கு வாக்களிக்கத் தயாராகி விட்டனர்.

திண்டுக்கல், மருங்காபுரி இடைத்தேர்தலில் பண பலம், அதிகார பலத்தை தாண்டி அதிமுக வெற்றி பெற்றது. அதேபோன்று ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலிலும் அதிமுக வெற்றி பெறும், என்றார்.

SCROLL FOR NEXT