அரூர்: தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே அடிப்படை வசதி கோரி கிராம மக்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர்.
பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த காளிப்பேட்டை பகுதியில் 45 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு குடிநீர், சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. இது தொடர்பாக பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களில் அப்பகுதி மக்கள் மனு அளித்தனர்.
இருப்பினும் இவர்களது கோரிக்கை நிறை வேற்றித் தரப்படவில்லை. அதேபோல, இங்கு வசிக்கும் மக்கள் தங்களின் வீடுகளுக்கு பட்டா வழங்கவும் அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த கோரிக்கைகள் அனைத்தும் நிலுவையிலேயே இருப்பதால் இதைக் கண்டித்து தற்போது வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி வைத்து போராடி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.