திண்டுக்கல்: பொம்மலாட்டத்தில் அதிமுகவை ஆட்டுவிக்கும் கயிறாக பாஜக உள்ளது என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேசினார்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக் கோட்டையில் திராவிடர் கழகம் சார்பில் திராவிட மாடல் விளக்க பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. கூட்டத்தில் திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி பேசியதாவது: பொம்மலாட்டத்தில் ஆட்டுவிக்கும் கயிறுபோல் அதிமுகவை பாஜக ஆட்டுவிக்கிறது.
அதிமுகவில் பஞ்சாயத்தை தீர்க்கிறேன் என இறங்கியுள்ள பாஜக அந்தக் கட்சியை நீர்த்துப்போகச் செய்து விடும். அதிமுகவினர் எங்கள் தோழர்கள். 4 பிரிவாக இருக்கின்றனர். இவர்களில் ஒருவர் இரட்டை இலைக்கு வாக்கு சேகரிப்பேன். வேட்பாளரின் பெயரைக் கூற மாட்டேன் என்பதெல்லாம் வேடிக்கையாக உள்ளது.
கல்லூரி மாணவிகள் படிப்பி லும், பொருளாதாரத்திலும் முன்னேற்றம் காண மாதம் ஆயிரம் ரூபாயை தமிழக அரசு வழங்கி வருகிறது. ஈரோடு இடைத் தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். வரும் மக்களவைத் தேர்தலுக்கு இந்த தேர்தல் முன்னோட்டமாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.