பிரதிநிதித்துவப் படம் 
தமிழகம்

நிலம் ஒப்படைப்பதில் தொடரும் தாமதம் மதுரை விமான நிலைய விரிவாக்கப் பணி எப்போது தொடங்கும்?

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: மதுரை விமான நிலைய விரிவாக்கத்துக்கான நிலம் ஒப்படைப்பதில் தொடரும் இழுபறியால் விரிவாக்கப் பணிகளை தொடங்குவது தொடர்ந்து தாமதமாகிறது.

மதுரை விமானநிலையம் 1962-ல் உள்நாட்டு சேவையுடன் தொடங்கப்பட்டு 2013-ம் ஆண்டில் வெளிநாட்டுச் சேவைக்கு மாறியது. மதுரையிலிருந்து ஸ்ரீலங்கா, துபாய், சிங்கப்பூர் ஆகிய 3 நாடுகளுக்கு மட்டும் இந்திய விமான நிறுவனங்கள் நேரடிச் சேவை வழங்குகின்றன. மதுரை விமான நிலையத்தில் தற்போது வரை 3 சர்வதேச விமானச் சேவைகள் மட்டுமே இருந்தும் அதிகளவில் பயணிகளைக் கையாள்கிறது.

கோவை, விஜயவாடா, ஷீர்டி, கண்ணூர், திருப்பதி விமான நிலையங்கள் குறைந்தளவில் பயணிகளைக் கையாண்டபோதிலும் சர்வதேச விமான நிலையங்களாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டன. அதே நேரத்தில் அதிக பயணிகளைக் கையாலும் மதுரையை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலும் கோரிக்கை உள்ளது.

இதற்கிடையே, ஏப்ரல் 1 முதல் மதுரை விமான நிலையத்தை 24 மணி நேரமும் செயல்படுத்தும் வகையில் விமானப் போக்குவரத்து ஆணையம் அனுமதி அளித்தது. ஆனாலும், பெரிய விமானங்கள் வந்து செல்லும் அளவுக்கு மதுரை விமானநிலையத்தை விரிவாக்கம் செய்யாததால் சர்வதேச விமானநிலையமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை.

தற்போது மதுரை விமானநிலைய ரன்வே 7,500 அடி உள்ளது. இதனை 5 ஆயிரம் அடி அதிகரித்து 12,500 அடியாக உயர்த்தவே விரிவாக்க திட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், விரிவாக்கத் திட்டம் தாமதமாவதால் மதுரை விமான நிலையத்தின் வளர்ச்சியில் பின்னடைவை ஏற்படுத்துவதோடு, தென் தமிழகத்தின் வளர்ச்சிக்கு மிகுந்த தடையாக உள்ளது.

மதுரை எம்பி சு.வெங்கடேசன் கூறுகையில், விமான நிலைய விரிவாக்கத்துக்கான நிலம் வழங்கியோருக்குப் பணம் வழங்கப்பட்டுவிட்டது. அதில் 2 நீர் நிலைகளின் சிறு பகுதி இருக்கிறது. இப்பகுதிகள் அரசிடம் உள்ளன. ஆனால், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி வகைமாற்றம் செய்து விமான நிலையத்துக்கு எடுக்க தமிழக முதல்வர் தலைமையிலான குழு முடிவெடுக்க வேண்டும்.

இது வழக்கமான நடைமுறைதான். ஆனால், கையகப்படுத்தும் நீர்நிலையின் நிலத்துக்கு தகுந்தபடி அதே நீர்நிலையின் மற்றொரு பகுதியில் நிலம் வழங்கி அதையும் வகை மாற்ற வேண்டும். நிலம் கையகப்படுத்துவதில் இந்த ஒரு பணி மட்டுமே தற்போது உள்ளது.

ரன்வே விரிவாக்கத்தை மதுரை-தூத்துக்குடி சாலையில் குறுக்காக அண்டர் பாஸ் முறையில் கீழே வாகனங்கள், மேலே விமானங்கள் செல்லும் திட்டம் இருந்தது. ஆனால், இதற்கு ரூ.200 கோடி செலவாகும் என்பதால் தற்போது ரூ.150 கோடிக்குள் மாற்றுப்பாதை வழியாக விரிவாக்கம் செய்ய ஏற் பாடுகள் நடக்கின்றன என்றார்.

SCROLL FOR NEXT