தமிழகம்

தினசரி சந்தையை இடம்மாற்றும் விவகாரம் | கோவில்பட்டியில் வியாபாரிகள் கடையடைப்பு

எஸ்.கோமதி விநாயகம்

கோவில்பட்டி: தினசரி சந்தையை இடம் மாற்றுவது தொடர்பான பிரச்சினையால் கோவில்பட்டியில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோவில்பட்டியில் நகராட்சிக்கு உட்பட்ட பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தினசரி சந்தை இயங்கி வருகிறது. இங்கு மொத்தம் 398 கடைகள் உள்ளன. இதில், 72 கடைகள் வரை ஏலம் போகாமல் உள்ளன. இங்குள்ள கடைகளின் கட்டிடம் மிகவும் பழமையானதாக உள்ளதால், அதனை இடித்துவிட்டு, நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் புதிதாக கடைகள் கட்டுவதற்கு நகராட்சி நிர்வாகம் கடந்த 2021-ம் ஆண்டு ஏற்பாடுகளை செய்தது. இதற்கு தற்போது அரசின் அனுமதி கிடைத்த நிலையில் ரூ.6.84 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, சந்தையில் புதிதாக 251 கடைகள் கட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதற்கிடையே, புதிய கடைகள் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வரும்வரை தற்காலிக காய்கறி சந்தை, புறவழிச்சாலையில் உள்ள புதிய கூடுதல் பேருந்து நிலைய வளாகத்தில் செயல்பட தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்தனர். தினசரி சந்தை ஜன.26-ம் தேதி முதல் தற்காலிக இடத்தில் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்து, புதிய கடைகள் கட்டுவது தொடர்பான வரைபடம் பொதுமக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தினசரி சந்தை வியாபாரிகள் சங்கத்தினர் மற்றும் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினர் வலியுறுத்தி வந்தனர்.

தினசரி சந்தைக்காக புதிய கடைகள் கட்டுவது குறித்து ஆலோசனை கூட்டம் கடந்த 6-ம் தேதி நடைபெற இருந்தது. கூட்டத்துக்கு வியாபாரிகள் வராததால், மறுநாள் (7-ம் தேதி) ஆலோசனை கூட்டம் நடத்துவதற்காக வியாபாரி சங்கங்களுக்கு அறிவிப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து நேற்று நடந்த கூட்டத்தில் சிறு வியாபாரிகள் சங்க தலைவர் எஸ்.பால்ராஜ், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மண்டல தலைவர் எம்.ராதாகிருஷ்ணன் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். அதேநேரத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தினசரி சந்தை வியாபாரிகள் சங்கத்தினர் கூட்டத்தை புறக்கணித்தனர். இதனால் தற்காலிக சந்தையில் குலுக்கல் முறையில் கடைகள் ஒதுக்கீடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

இன்று கடையடைப்பு: கோவில்பட்டி நகராட்சி சந்தையில் தற்போது இயங்கி வரும் அனைத்து கடைகளுக்கும் பாதுகாப்பான அடிப்படை வசதிகளுடன் கூடிய மாற்று இடத்தை வணிகர்களுக்கு ஏற்படுத்தித் தர வேண்டும்; கோவில்பட்டி நகராட்சி தினசரி சந்தையில் வணிகம் செய்து வரும் வணிகர்களுக்கு புதிதாக கடை கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்ட பின்பு உரிய முறையில் முன்னுரிமை அடிப்படையில் கடை கட்டிடங்களை ஒதுக்கீடு செய்து கொடுப்பது தொடர்பாக தமிழக அரசின் ஒப்புதலுடன் நகராட்சி நிர்வாகம் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நகராட்சி தினசரி சந்தை வியாபாரிகள் சங்கம் இன்று (8-ம் தேதி) கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது.

அதன்படி இன்று காலை முதல் நகராட்சிக்குட்பட்ட தினசரி சந்தையில் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. போராட்டத்தை ஒட்டி தினசரி சந்தை நுழைவாயில் முன்பு பந்தல் அமைத்து போராட்டம் நடத்த வியாபாரிகள் தயாராகினர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் அதனை தடுத்து நிறுத்தி அனுமதி இல்லாமல் பந்தல் அமைக்கக் கூடாது என தெரிவித்தனர். இதையடுத்து வியாபாரிகள் தினசரி சந்தையின் உள்பகுதியில் பந்தல் அமைத்து அதில் அமர்ந்திருந்தனர்.

வியாபாரிகளின் கடை அடைப்பு போராட்டத்துக்கு ஜவுளி ரெடிமேட் சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு சங்கத்தினர் ஆதரவு தெரிவித்து கடைகளை திறக்கவில்லை. இதன் காரணமாக கோவில்பட்டி பிரதான சாலை, மாதாக் கோவில் சாலை, தெற்கு பஜார், தினசரி சந்தை சாலை உள்ளிட்ட இடங்களில் உள்ள பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

SCROLL FOR NEXT