புதுமைப் பெண் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் 
தமிழகம்

1,04,347 பேருக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை: இரண்டாம் கட்ட “புதுமைப் பெண்” திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்  

செய்திப்பிரிவு

திருவள்ளூர்: 1,04,347 மாணவிகள் பயன்பெறும் வகையில் இரண்டாம் கட்ட “புதுமைப் பெண்” திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (பிப்.8) தொடங்கி வைத்தார்.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வீதம் உதவித் தொகை வழங்கும் ”புதுமைப் பெண்” திட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

புதுமைப் பெண் திட்டத்தின் முதற்கட்டத்தில் 1,16,342 மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். மேலும் இத்திட்டத்தின் மூலம் இடைநிற்றலில் இருந்து 12,000 மாணவிகள் மீண்டும் உயர்கல்வியில் சேர்ந்து பயனடைந்துள்ளதாக தமிழக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (பிப்.8) திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராம், இந்து கல்லூரியில் நடைபெற்ற விழாவில், மேலும் 1,04,347 மாணவிகள் பயன்பெறும் வகையில் புதுமைப் பெண் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தினை தொடங்கி வைத்தார்.

இந்த தொடக்க விழாவில், உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி. கீதா ஜீவன், பால்வளத் துறை அமைச்சர் சா.மு. நாசர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை முதன்மைச் செயலாளர், சமூக நலத்துறை இயக்குநர் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT