கோவை: கரோனா தொற்று பரவல் வெகுவாக குறைந்துள்ள போதும் கோவை விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சீனா உள்ளிட்ட சில வெளிநாடுகளில் கரோனா தொற்று பரவல் கடந்த சில மாதங்களாக அதிகரித்து காணப்பட்டது. இதையடுத்து இந்தியா முழுவதும் உள்ள விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் ரேண்டம் முறையில் கரோனா பரிசோதனை மேற்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியது.
அந்தந்த மாநில அரசின் சுகாதாரத்துறையினர் இப்பணியை மேற்கொண்டு வருகின்றனர். தொற்று பரவல் வெகுவாக குறைந்துள்ள போதும் விமான நிலையங்களில் கரோனா பரிசோதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது குறித்து கோவை விமான நிலையத்தில் உள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது, “கோவை விமான நிலையத்தை தினமும் 10 ஆயிரம் பேர் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் 6 பேருக்கு மட்டுமே தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்த மாதம் இதுவரை யாருக்கும் தொற்று பாதிப்பு கண்டறியப் படவில்லை.
நோய் தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்துள்ள போதும் பரிசோதனையை நிறுத்துவது அல்லது குறைத்துக் கொள்வது குறித்து மத்திய அரசு வெளியிடும் சுற்றறிக்கையை பொறுத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதுவரை பரிசோதனைகள் தொடரும்” என்றனர்.