சென்னை: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் வசிக்கும் 120 மாணவர்களுக்கு எச்டிஎப்சி வங்கியின் சமூக பொறுப்புநிதியிலிருந்து ரூ. 39.20 லட்சம் கல்விஉதவித் தொகைக்கான ஆணைகள் வழங்குவதை முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், ஆற்றங்கரை ஓரங்கள், சாலை ஓரங்கள் மற்றும்பிற ஆட்சேபனைக்குரிய பகுதிகளில் வசிக்கின்ற குடும்பங்கள், பொருளாதாரத்தில் நலிவுற்ற வீடற்ற ஏழை எளிய குடும்பங்களுக்கு வாரிய அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒதுக்கீடு வழங்கி குடியமர்த்தி வருகிறது.
வாரியக் குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்காக திறன் மேம்பாட்டுப் பயிற்சி, வேலை வாய்ப்பு முகாம்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பிற சமூக மேம்பாட்டு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. வாரிய குடியிருப்புகளில் வசிக்கும்உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவியரை ஊக்கப்படுத்தும் வகையில் தனியார் நிறுவனங்களின் உதவியுடன் கல்வி உதவித் தொகை பெறப்பட்டு வழங்கப்படுகிறது. கடந்தஆண்டு 141 மாணவ, மாணவியர்களுக்கு எச்டிஎப்சி வங்கி சார்பில் ரூ.42.30 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, இந்தாண்டும் மருத்துவம், பொறியியல், இளங்கலை மற்றும் முதுகலை போன்ற உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் எச்டிஎப்சி வங்கியின் சமூக பொறுப்பு (CSR) நிதியின் கீழ் வாரிய திட்டப்பகுதிகளில் மொத்தம் 120 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.39.20 லட்சம்மதிப்புள்ள கல்வி உதவித் தொகைவழங்கும் அடையாளமாக 12 மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில், அமைச்சர் க.பொன்முடி, தலைமைச் செயலர் வெ.இறையன்பு, வீட்டுவசதித் துறை செயலர் அபூர்வா, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்இயக்குநர் ம.கோவிந்த ராவ், எச்டிஎப்சி (தமிழ்நாடு மற்றும் கேரளா) வங்கி தலைவர் குமார் சஞ்சீவ், மண்டல தலைவர் ரமேஷ்வங்குரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.