தமிழகம்

சென்னை மாநகராட்சியில் 1,813 சட்டவிரோத கழிவுநீர் இணைப்பு துண்டிப்பு: ரூ.5.98 லட்சம் அபராதம் விதிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: கடந்த 21 நாட்களில் மழைநீர் வடிகாலில்இணைக்கப்பட்ட 1,813 கழிவு நீர் இணைப்புகளை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் துண்டித்துள்ளனர். இதில் தொடர்புடையோருக்கு ரூ.5.98 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் தங்குதடையின்றி செல்லும் வகையில் மழைநீர் வடிகால் பராமரிக்கப்பட்டு வருகிறது. மழைநீர் செல்வதற்காக மட்டுமே அமைக்கப்பட்ட இந்த வடிகால்களில் ஆங்காங்கேசட்ட விரோதமாக கழிவுநீர் இணைப்புகள் இணைக்கப்பட்டுள்ளன. இவ்வாறுசெய்துள்ள குடியிருப்புகள் மற்றும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, கடந்த மாதம் 13-ம் தேதி முதல் பிப்.3-ம் தேதி வரை சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில்உள்ள குடியிருப்புகள் மற்றும் நிறுவனங்களில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 1,813 சட்ட விரோதகழிவுநீர் இணைப்புகள் கண்டறியப்பட்டு, அவற்றின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. இதில் தொடர்புடையவர்களுக்கு ரூ.5 லட்சத்து 98,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக அம்பத்தூர் மண்டலத்தில் 166சட்டவிரோத இணைப்புகள் துண்டிக்கப்பட்டு, ரூ.1.41 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்களில் கழிவுநீரை வெளியேற்றுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். மீறினால் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT