தமிழகம்

வண்டலூர் உயிரியல் பூங்கா - கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இடையே புதிய ரயில் நிலையம் அமைக்க வேண்டும்: மக்கள் கோரிக்கை

பெ.ஜேம்ஸ்குமார்

வண்டலூர்: வண்டலூர் உயிரியல் பூங்கா- கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் இடையே புதிய ரயில் நிலையம் அமைக்க வேண்டுமென சுற்றுப்புற கிராம மக்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் அப்பகுதியில் படிக்கும் கல்லூரி மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா 602 ஹெக்டேரில் அமைந்துள்ளது. தினமும் சராசரியாக 5 ஆயிரத்துக் கும் அதிகமான பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர். விடுமுறை நாட்கள் மற்றும் விழாக் காலங்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.

இப்பூங்காவுக்கு பெரும்பாலானோர் மின்சார ரயிலில் வந்து, ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 1.5 கிமீ தொலைவு நடந்து பூங்காவுக்கு வரவேண்டியுள்ளது. ஆட்டோவில் செல்ல ரூ.50 முதல் ரூ.100 வரை செலவாகும். எனவே, பூங்கா எதிரில் புதிய ரயில் நிலையம் அமைக்க பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இதற்காக 1992-ம் ஆண்டு வண்டலூர் ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் ஆண்டுகள் 30 ஆகியும் இதுவரை அந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. நீண்ட நாள் கோரிக்கைக்கு பின் ரயில்வே நிர்வாகம், அப்போதைய காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் இணைந்து, 1.35 ஏக்கர் நிலம் ஒதுக்க முடிவு செய்தன. ஆனால் இத்திட்டம் இன்னும் ஆய்வு நிலையிலேயே இருந்து வருகிறது.

இந்நிலையில், கிளாம்பாக் கத்தில் 44.75 ஏக்கரில், ரூ.393.74 கோடியில், ஒரே வளாகத்தில் அனைத்து அரசு, தனியார் பேருந்து களை இயக்கும் வசதிகளுடன் புதிய பேருந்து முனையம் அமைக்கப்பட்டு வருகிறது. இது விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. பயணிகள் இந்த புதிய பேருந்து நிலையத்துக்கு ரயில் மூலம் வருவதற்கு வசதி இல்லை. வண்டலூர் அல்லது ஊரப்பாக்கம் ரயில் நிலையத்தில் இறங்கிதான் வர வேண்டும். இதனால் கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் அமைக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

இது வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், ஏற்கெனவே வண்டலூர் பூங்கா அமைந்துள்ள பகுதிக்கு ரயில் நிலையம் அமைக்கும் கோரிக்கையும் உள்ளது. அதனையும் கருத்தில் கொள்ள வேண்டும். கிளாம்பாக்கம், வண்டலூர் பூங்கா இரண்டுக்கும் மையப்பகுதியில் புதிய ரயில் நிலையம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரி வருகின்றனர்.

அவ்வாறு ரயில் நிலையம் அமைந்தால் வண்டலூர், ஓட்டேரி, கிளாம்பாக்கம், கொளப்பாக்கம், ரத்தினமங்கலம் உள்ளிட்ட சுற்றுப்புற கிராம மக்கள் மற்றும் வண்டலூர் பூங்கா, பேருந்து நிலையம் வருவோர், சுற்றுவட்டார கல்லூரி மாணவர்கள் பயனடைவார்கள் என வண்டலூர் கிராம மக்கள் நலச்சங்க நிர்வாகி திருவேங்கடம் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT