சென்னை: மத்திய பாஜக அரசின் பட்ஜெட்டை கண்டித்து போராட்டம் நடத்த இருப்பதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் ஆகியவை அறிவித்துள்ளன.
இதுகுறித்து தவிச மாநில பொதுச் செயலாளர் சாமி நடராஜன், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம் ஆகியோர் வெளியிட்ட கூட்டறிக்கை: விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையைத் தீர்மானிக்க வேண்டும் எனத் தொடர்ந்து விவசாயிகள் வலியுறுத்தி வரும் நிலையில், அது குறித்து மத்திய அரசின் பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை.
வேளாண்மை துறைக்குகடந்த ஆண்டு ரூ.1,51,521 கோடிஒதுக்கப்பட்ட நிலையில், நடப்பாண்டில் ரூ.1,44,214 கோடியை மட்டுமே மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. அதேபோல் உரம் மானியத்துக்கு ரூ.54,000 கோடியை குறைத்துள்ளது.
நாடு முழுவதும் போராட்டம்: எனவே, மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை அதிகரித்து வரும் விலைவாசி உயர்வுக்குத் தீர்வு காணாத ஒரு பட்ஜெட்டாக அமைந்திருக்கிறது. இந்த பட்ஜெட்டை கண்டித்து நாடு முழுவதும்வரும் பிப்.11-ம் தேதி கருப்பு நாளாக கடைபிடித்து, பட்ஜெட் நகலைக் கொளுத்தும் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளோம்.
இப்போராட்டத்தை தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும், விவசாயிகள் - விவசாய தொழிலாளர்களை அணி திரட்டி வலுவாக நடத்த வேண்டுமென விவசாயிகள் சங்கமும், விவசாயத் தொழிலாளர் சங்கமும் அறைகூவல் விடுக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.