சென்னை: தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் கவுன்சில் தேர்தல் அறிவிப்புக்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் கவுன்சிலுக்கு தலைவர், துணைத் தலைவர்கள், செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் மார்ச் 26-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த தேர்தல் அறிவிப்பை ரத்து செய்யக் கோரியும், தேர்தலுக்கு தடை கோரியும் கவுன்சில் உறுப்பினர்களான கமல்குமார். சீனிவாசன் உள்ளிட்ட 8 பேர் சென்னைஉயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தலை நடத்த வேண்டிய சூழலில், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை மற்றும் இந்திய திரைப்பட சம்மேளனத்தில் நிர்வாகிகளாக உள்ளவர்கள் தவிர்த்து, வேறு சங்கங்களில் நிர்வாகிகளாக உள்ளவர்கள் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் கவுன்சிலில் போட்டியிட தகுதியில்லை என கவுன்சில் விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டு இருப்பது பாரபட்சமானது மட்டுமின்றி சட்டவிரோதமானது.
எனவே, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியை தேர்தல் அதிகாரியாக நியமித்து, வாக்காளர் பட்டியலை வெளியிட்டு இந்த தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும் என அவர்கள் கோரியுள்ளனர். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.