தமிழகம்

முதல்வர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை முழுவீச்சில் செயல்படுத்த வேண்டும்: அரசு மருத்துவமனை டீன்களுக்கு அமைச்சர் உத்தரவு

செய்திப்பிரிவு

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை முழுவீச்சில் செயல்படுத்த வேண்டும் என்று அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின் டீன்களுக்கு சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உத்தரவிட்டுள் ளார்.

தமிழக சுகாதாரத் துறை சார்பில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின் முதல்வர்களுடனான ஆய்வுக் கூட்டம், சென்னை எழும்பூரில் உள்ள குடும்ப நல பயிற்சி மைய கூட்டரங்கில் நேற்று நடந்தது. அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் நடந்த கூட்டத்தில் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குநர் (டிஎம்இ) ஏ.எட்வின் ஜோ, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின் முதல்வர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசியதாவது:

புரட்சிகரமான முன்னோடி திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி, அனைத்து தரப்பினரின் பாராட்டுதலை தமிழக சுகாதாரத் துறை தொடர்ந்து பெற்று வருகிறது. உலகத் தரம் வாய்ந்த சிகிச்சை அளிக்கும் வகையில் சுகாதார கட்டமைப்புகளை வலுப்படுத்துதல் மற்றும் மருத்துவ மனிதவளத்தை பெருக்குதல் ஆகியவற்றில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் 5 அரசு மருத்துவக் கல்லூரிகள் புதியதாக உருவாக்கப்பட்டு 1000-க்கும் அதிகமான எம்பிபிஎஸ் இடங்கள், 500-க்கும் மேற்பட்ட மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை முழுவீச்சில் செயல்படுத்த வேண்டும். முழு உடல் பரிசோதனை திட்டம், மூளைச் சாவு சான்றளித்தல், மூளைச் சாவு அடைந்தவர்களிடம் இருந்து உறுப்புகளை பெறுதல், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முறைகளை இரண்டாம் கட்ட நகரங்களுக்கு விரிவுபடுத்துதல் போன்ற பணிகளையும் வேகப்படுத்த வேண்டும்.

அதேபோல, முதல் மற்றும் இரண்டாம்கட்ட டயாலிசிஸ் சேவைகள், புதிய தாய்ப்பால் வங்கிகள் உருவாக்கம் மற்றும் செம்மைபடுத்துதல், செயற்கை அவயம், மறுவாழ்வு சிகிச்சைகள், தொற்றா நோய் கண்டறிந்து அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ளுதல், விபத்து, உயிர் காக்கும் சிகிச்சை சேவைகளை நவீனப்படுத்துதல், சுத்தமான, பசுமை வளாகங்களை ஏற்படுத்துதல் போன்ற பணிகளையும் மருத்துவக் கல்வி இயக்குநரும், கல்லூரி முதல்வர்களும் செயல்படுத்த வேண்டும்.

உயர் நிலை மருத்துவ சேவை வழங்குவதில் 51 ஆண்டு வரலாறு கொண்ட மருத்துவக் கல்வி இயக்குநகரத்தின் கீழ் செயல்படும் மருத்துவமனைகள் பலதரப்பட்ட மக்களின் சிறப்பு மருத்துவ சேவைகளை பூர்த்தி செய்யும் வகையி் வெகுசிறப்பாக செயல்பட வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT