சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்திற்கு கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட 5 பேர் பதவியேற்றுக் கொண்டனர்.
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 5 பேரை கூடுதல் நீதிபதிகளாக நியமனம் செய்ய குடியரசுத் தலைவர் நேற்று (பிப்.6) ஒப்புதல் அளித்தார். இதன்படி, வழக்கறிஞர்களான லெஷ்மண சந்திர விக்டோரியா கவுரி, பிள்ளைப்பாக்கம் பஹுகுடும்பி பாலாஜி, கந்தசாமி குழந்தைவேலு ராமகிருஷ்ணன், நீதித்துறை அதிகாரிகளான ராமச்சந்திரன் கலைமதி, கோவிந்தராஜன் திலகவதி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில், இவர்கள் 5 பேரும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்கும் நிகழ்ச்சி இன்று (பிப்.7) சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதில், பொறுப்புத் தலைமை நீதிபதி டி.ராஜா 5 பேருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.