தமிழகம்

பிளஸ் 1-க்கு இந்த ஆண்டு முதல் பொதுத்தேர்வு: அரசாணையை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார்

செய்திப்பிரிவு

பிளஸ் 1 வகுப்புக்கு இந்த ஆண்டு முதல் பொதுத்தேர்வு நடத்த அரசு முடிவுசெய்துள்ளது. இதுதொடர்பான அரசாணையை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமைச் செயலகத்தில் நேற்று வெளியிட்டார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:

* 2017-18-ம் கல்வி ஆண்டில் இருந்து பிளஸ் 1 மாணவர்களுக்கு மாநில அளவில் பொதுத்தேர்வு நடத்தப்படும்.

* பிளஸ் 1 தேர்வுக்கு 600 மதிப்பெண்ணும், பிளஸ் 2 தேர்வுக்கு 600 மதிப்பெண்ணும் என இரண்டு ஆண்டுகளுக்கும் சமமான முக்கியத்துவம் (Equal Weightage) அளிக்கும் வகையில், மொத்தம் 1200 மதிப்பெண் வழங்கப்படும்.

* இதுவரை செய்முறைத்தேர்வு உள்ள பாடங்களுக்கு 150 மதிப்பெண்ணுக்கு தேர்வு எழுதிவந்த மாணவர்கள் இனிவரும் தேர்வுகளில் ஆண்டுக்கு 70 மதிப்பெண்ணுக்கு மட்டுமே தேர்வு எழுத வேண்டும். செய்முறைத்தேர்வு இல்லாத பாடங்களுக்கு 200 மதிப்பெண்ணுக்கு தேர்வு எழுதி வந்த மாணவர்கள் இனிவரும் தேர்வுகளில் ஆண்டுக்கு 90 மதிப்பெண்ணுக்கு மட்டுமே தேர்வு எழுத வேண்டும்.

* வினாக்களின் எண்ணிக்கையும் மதிப்பெண்ணும் குறைவதால் தற்போதைய தேவையைக் கருதி நடைமுறையில் உள்ள 3 மணி நேர பொதுத்தேர்வின் கால அளவு இரண்டரை மணி நேரமாக குறைக்கப்படுகிறது.

* அனைத்துப் பாடங்களிலும் குறைந்தபட்ச தேர்ச்சி விழுக்காடு 35 சதவீதமாக நிர்ணயிக்கப்படுகிறது.

* பிளஸ் 1 செய்முறைத் தேர்வு பிளஸ் 2 செய்முறைத் தேர்வுடன் இணைத்து நடத்தப்படும்.

* பிளஸ் 1 பொதுத்தேர்வில் சில பாடங்களில் தோல்வியடையும் மாணவர்கள், அந்த பாடங்களை ஜுன் அல்லது ஜூலை மாதத்தில் நடத்தப்படும் உடனடி சிறப்புத் தேர்விலோ அல்லது பிளஸ் 2 இறுதித் தேர்வின்போதோ எழுதிக்கொள்ளலாம். எனவே, பிளஸ் 1 வகுப்பில் யாரும் தோல்வியடைய மாட்டார்கள்.

* பிளஸ் 2 பொதுத்தேர்வுக்குப் பின்னர் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் (Consolidated Marksheet) வழங்கப்படும். பிளஸ் 1 வகுப்பில் உள்ள அடிப்படையான பாடங்களை ஊன்றிக் கற்பதன் மூலம் அனைத்து மாணவர்களும் பிளஸ் 2 முடிக்கும் நிலையில் ஆழமான பாட அறிவை பெறுவதுடன் உயர்கல்வி படிப்புகளை எளிதாகக் கற்று சிறப்பிடம் பெற இயலும். மேலும், பல்வேறு போட்டித் தேர்வுகளையும், திறன் தேர்வுகளையும் தமிழக மாணவர்கள் வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும்.இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT