மதுரை: மதுரையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற அரசு விழா ஏற்பாடுகள், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் முதல்வருக்கு நிகராக செய்யப்பட்டிருந்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
மதுரை சுற்றுச்சாலையில் வண்டியூர் அருகே நேற்று 72,122 மகளிருக்கு ரூ.180.96 கோடி கடனுதவியை அமைச்சர் உதயநிதி வழங்கினார். 72 ஆயிரம் மகளிர் ஊராட்சி ஒன்றியம் வாரியாக வாகனங்களில் அழைத்துவர ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவர்களுக்கு உணவு உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டன. அரசுப் பேருந்துகள் மூலம் விழாப் பந்தலுக்கு பிற்பகல் 3 மணிக்குள் வந்து சேர்ந்தனர்.
1,500-க்கும் அதிகமான போலீஸார் பாதுகாப்பில் ஈடுபட்டனர். விரகனூர் சந்திப்பு முதல் கருப்பாயூரணி சந்திப்பு வரை சுற்றுச் சாலையில் மதியம் முதல் இரவு வரை பொதுப்போக்குவரத்து முழுமையாக ரத்து செய்யப்பட்டது. விழாவில் பங்கேற்கும் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. இப்படி ஏற்பாடுகள் ஒவ்வொன்றும் முதல்வருக்கு வழங்கப் படுவதைப்போல் திட்டமிட்டு மேற் கொள்ளப்பட்டிருந்தது.
இது குறித்து விழாவில் பங்கேற்றோர், அலுவலர்கள் சிலர் கூறியது: மாநில அமைச்சர் ஒருவர் பங்கேற்கும் எந்த விழாவும் இவ்வளவு பிரம்மாண்டமாக ஏற் பாடு செய்யப்படவில்லை.
உதயநிதி ஹோட்டலிலிருந்து விழாப் பந்தலுக்கு வரும் வரையில் தடையின்றி வாகனங்கள் செல்ல சிறப்பு ஏற்பாடு, அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்த பங்களிப்பு, கூட்டணிக் கட்சிகளுக்கு முன்னுரிமை என ஒவ்வொரு ஏற்பாடும் முதல்வர் பங்கேற்கும் விழாவைப்போல் செய்யப்பட்டிருந்தது.
முழுக்க முழுக்கப் பெண்களை மட்டுமே பங்கேற்கச் செய்து, அதில் அமைச்சர் உதயநிதி பங்கேற்றுள்ளது அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் பெறுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.