தமிழகம்

விஜயபாஸ்கர் மனைவிக்கு வருமானவரித் துறை சம்மன்: இன்று நேரில் ஆஜராக உத்தரவு

செய்திப்பிரிவு

வீடுகள், அலுவலகத்தில் நடந்த சோதனை தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு அமைச்சர் விஜயபாஸ்கரின் மனைவிக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.

சென்னை ஆர்.கே.நகரில் இடைத்தேர்தலில் வாக்காளர் களுக்கு பணம் விநியோகித்தது தொடர்பான புகாரையடுத்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகம் மற்றும் அவர் தொடர்புடைய அனைத்து இடங்களிலும் வருமான வரித் துறை அதிகாரிகள் கடந்த 7-ம் தேதி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ஏராளமான ஆவணங்களும், பணமும் கைப்பற்றப்பட்டன.

ஆர்.கே.நகரில் வாக்காளர் களுக்கு பணம் கொடுத்ததற்கான ஆவணங்கள், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் பாலாஜிக்கு பணம் கொடுத்தது உட்பட பண பரிவர்த்தனைகள் குறித்த ஏராளமான தகவல்கள் அந்த ஆவணங்களில் இருந்தன.

அதைத் தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கருக்கு வருமான வரித் துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பினர். நுங்கம்பாக்கம் வருமான வரித் துறை அலுவலகத்துக்கு 3 முறை அவரை வரவழைத்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் விஜயபாஸ் கரின் மனைவி ரம்யாவுக்கு வருமான வரித் துறை அதிகாரிகள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சம்மன் அனுப்பியுள்ளனர். அதில், 4-ம் தேதி (இன்று) விசாரணைக்கு ஆஜராகுமாறு குறிப்பிட்டுள்ளனர்.

‘‘அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்பட்டு கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்ததில், சில பணப் பரிவர்த் தனைகளை அவரது மனைவி ரம்யா செய்திருப்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்துவதற்காகவே அவருக்கு சம்மன் அனுப்பப் பட்டது’’ என்று வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.

விஜயபாஸ்கர் மறுப்பு

இதற்கிடையே, ‘‘வருமான வரித் துறை அலுவலகத்தில் இருந்து எனது மனைவிக்கு சம்மன் எதுவும் வரவில்லை’’ என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT