தஞ்சாவூர்: மழையால் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்த கணக்கெடுப்பில், வருவாய்த் துறை, வேளாண்மைத் துறை அதிகாரிகளின் அலட்சிய போக்கை கண்டித்து, ஊரணிபுரத்தில் நேற்று அழுகிய பயிர்களுடன் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையால், நெற்கதிர்கள் மற்றும் மானாவாரி பயிர்களான உளுந்து, நிலக்கடலை ஆகியன நீரில் மூழ்கி சேதமடைந்தன.
இதன் பாதிப்புகள் குறித்து வருவாய்த் துறை, வேளாண்மைத் துறை அதிகாரிகளுக்கு பலமுறை தகவல்கள் தெரிவித்தும், கணக்கெடுப்பு பணிகளை செய்யாமல் விவசாயிகளை ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை வருவாய்த் துறை அதிகாரிகள் அலட்சியப்படுத்தி வருவதாகக் கூறி, அதைக் கண்டித்தும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக,
அரசு நெற்பயிர்களுக்கு ஏக்கர்ஒன்றுக்கு ரூ.40 ஆயிரம், மானாவாரி பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் வீதம் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியும், காப்பீடு செய்த விவசாயிகளுக்கு காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் உரிய பயிர் இழப்பீட்டுத் தொகையை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் ஊரணிபுரத்தில் நேற்று சாலை மறியல் நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் நலச் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் வீ.கே.சின்னத்துரை தலைமை வகித்தார். சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர்.கோவிந்தராஜ், பொருளாளர் கே.பி.துரைராஜ், மாவட்ட துணைத் தலைவர்கே.எம்.ஆறுமுகம் மற்றும் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மழையால் அழுகிய நெற்பயிர்களுடன் பங்கேற்றனர்.
தகவலறிந்து அங்கு வந்த ஒரத்தநாடு வட்டாட்சியர் சுரேஷ், திருவோணம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சுதா ஆகியோர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு, பாதிக்கப்பட்ட இடங்களை முழுமையாக ஆய்வு செய்து, அனைத்து விவசாயிகளுக்கும் உரிய நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்தனர்.
இதையடுத்து, போராட்டத்தை கைவிட்டு, விவசாயிகள் கலைந்து சென்றனர். மறியலால் பட்டுக்கோட்டை–கந்தர்வக்கோட்டை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.