திருவாரூர்: வேளாண் பொறியியல் துறையினரிடம் குறைந்த அளவு நெல் அறுவடை இயந்திரங்களே உள்ளதால், தனியார் நெல் அறுவடை இயந்திரங்களுக்கும் வாடகையில் 50 சதவீதத்தை தமிழக அரசு மானியமாக வழங்க வேண்டுமென டெல்டா மாவட்ட விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
டெல்டா மாவட்டங்களில் பெய்த மழை காரணமாக அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் வயலில் சாய்ந்து நீரில் மூழ்கி சேதமடைந்தன. இதையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அர.சக்கரபாணி மற்றும் வருவாய் மற்றும் வேளாண்துறை அலுவலர்கள் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை நேற்று முன்தினம் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது, மழை காரணமாக நெல், உளுந்து, நிலக்கடலை என 2.15 லட்சம் ஏக்கர் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் எடுத்த கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளதாக அமைச்சர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு இழப்பீடாக, ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்படும் எனவும், பாதிக்கப்பட்ட விவசாயிகள் நெல் அறுவடை மேற்கொள்ள வேளாண் பொறியியல் துறை மூலம் 50 சதவீத மானியத்தில் நெல் அறுவடை இயந்திரம் வாடகைக்கு வழங்கப்படும் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஆனால், வேளாண் பொறியியல் துறையினரிடம் போதுமான எண்ணிக்கையில் அறுவடை இயந்திரங்கள் இல்லை என்பதால், தனியார் நெல் அறுவடை இயந்திரங்களுக்கும் வாடகையில் 50 சதவீதத்தை அரசு மானியமாக வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கோவிலூர் ரவி, சேரன்குளம் செந்தில்குமார் ஆகியோர் கூறியதாவது: கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்கதிர்களை அறுவடை செய்ய வேளாண் பொறியியல் துறை சார்பில் 50 சதவீத மானியத்தில் நெல் அறுவடை இயந்திரம் வாடகைக்கு வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஆனால், வேளாண் பொறியியல் துறையினரிடம் தேவையான அளவுக்கு அறுவடை இயந்திரங்கள் இல்லை. இதனால், தனியார் நெல் அறுவடை இயந்திரங்களை நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. உதாரணமாக, திருவாரூர் மாவட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறையில், செயின் டைப் இயந்திரங்கள் 3, டயர் டைப் இயந்திரங்கள் 5 என 8 அறுவடை இயந்திரங்கள் மட்டுமே உள்ளன.
இதிலும், மழை அதிகமாக பெய்து வயல் முழுவதும் சேறாகிவிட்டதால், செயின் டைப் அறுவடை இயந்திரம் மட்டுமே இனி வயல்களில் இறங்கி அறுவடை செய்ய முடியும். எனவே, திருவாரூர் மாவட்டத்தில் பொறியியல் துறையிடம் உள்ள 3 செயின் டைப் இயந்திரங்களைக் கொண்டு நெல் அறுவடை செய்வது போதுமானதாக இருக்காது.
இதனால், தனியார் அறுவடை இயந்திரங்களைக் கொண்டு அறுவடை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தனியார் நெல் அறுவடை இயந்திரங்களுக்கும் வாடகையில் 50 சதவீதம் மானியமாக வழங்க அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்றனர். வேளாண் பொறியியல் துறையினரிடம் போதுமான எண்ணிக்கையில் அறுவடை இயந்திரங்கள் இல்லை.