தமிழகம்

பயிர் காப்பீட்டு திட்டத்தை விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் செயல்படுத்துக: வாசன்

செய்திப்பிரிவு

பயிர் காப்பீட்டு திட்டத்தை விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் செயல்படுத்த வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில் விவசாயிகள் தாங்கள் பயிர் செய்து விளைச்சல் பெற்ற நெல்லை அரசின் நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனைக்கு அனுப்புவார்கள். கடந்த சில வருடங்களாக தமிழகத்தில் நிலவிய தண்ணீர் பற்றாக்குறை, மின் தட்டுப்பாடு, இயற்கைச் சீற்றம் போன்ற காரணத்தால் விவசாயத் தொழிலில் பாதிப்பு ஏற்பட்டு நெல் விளைச்சல் குறைந்து கொண்டே வருகிறது.

தமிழக அரசு பொது விநியோகத் திட்டத்தின் மூலம் தமிழகத்தில் பொதுமக்களுக்கு ரேசன் பொருட்களை வழங்கி வருகிறது. இதற்காக சில குறிப்பிட்ட மாவட்டப் பகுதிகளில் அரசின் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் விவசாயிகளிடம் இருந்து நெல்கொள்முதல் செய்யப்படுகிறது.

உதாரணத்திற்கு கடந்த அக்டோபர் 2016 முதல் 2017 செப்டம்பர் மாதம் வரையிலான குறுவை சாகுபடி பருவத்தில் தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, கும்பகோணம், பாபநாசம், பேராவூரணி உட்பட 10 க்கும் மேற்பட்ட தாலுக்கா மையங்களில் மட்டும் 183 கொள்முதல் நிலையங்கள் மூலம் சுமார் 72,758 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.

ஆனால் 2015 -16 ம் ஆண்டில் இதே பருவத்தில் இதே நெல்கொள்முதல் மையங்கள் மூலம் சுமார் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. அதாவது 2015 - 16 ஆம் ஆண்டை ஒப்பிடும்போது 2016 - 17 ல் நெல் கொள்முதல் அளவு சுமார் 20 சதவீதம்தான். இவ்வாறு நெல் கொள்முதல் குறைந்து போனதற்கு காரணம் நெற்பயிருக்கு போதிய தண்ணீர் இல்லாதது, மின் தட்டுப்பாடு, வறட்சி, இயற்கைச் சீற்றம் ஆகியவற்றால் நெல்விளைச்சல் பெருமளவு குறைந்து போனது தான்.

2015 - 16 ல் திருச்சி மாவட்டப் பகுதிகளில் நடைபெற்ற குறுவை சாகுபடி பருவத்தில் சுமார் ஆயிரக்கணக்கான டன் நெல் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது சுமார் 100 டன்னுக்கும் குறைவான நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டிருக்கிறது. இவ்வாறு நெல்கொள்முதல் நிலையங்கள் குறைவதும், நெல் விளைச்சல் குறைவதும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றது. இதனால் நெற்பெயிரிட்ட விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு உட்பட்டிருக்கிறார்கள்.

தற்போது மத்திய அரசு கரும்புக்கு ஆதார விலையாக 2 ஆயிரத்து 550 ரூபாய் அறிவித்துள்ளது. இது போதுமானதல்ல. எனவே, மத்திய, மாநில அரசுகள் கரும்புக்கு ஆதார விலையை 4 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி கொடுக்க வேண்டும். மேலும் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகையான ரூபாய் 2 ஆயிரம் கோடியை அவர்களுக்கு கிடைப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த சில வருடங்களாக விவசாயத்தில் ஏற்பட்டிருக்கும் பெரும் பாதிப்பால் நெல், கரும்பு உட்பட பல்வேறு பயிர்களை பயிரிட்ட விவசாயிகளுக்கு நஷ்டம் தான் மிஞ்சியது. இச்சூழலில் 2015-16 ஆம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டுத் தொகை ரூபாய் 489 கோடி என தற்போது மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனை உடனடியாக விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டும். மேலும் 2016 - 17 ஆம் ஆண்டிலும் நெல், கரும்பு உட்பட பல்வேறு பயிர்களின் விளைச்சல் மிக மிக குறைவு என்பதால் அதற்கான பயிர் காப்பீட்டையும் மத்திய அரசு உடனடியாக அறிவித்து கால தாமதம் செய்யாமல் வழங்க முன்வர வேண்டும்.

எனவே மத்திய, மாநில அரசுகள் விவசாயத்தால் விவசாயிகள் அடைந்துள்ள நஷ்டத்தை கவனத்தில் கொண்டு பயிர் காப்பீட்டு திட்டத்தை விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் செயல்படுத்த வேண்டும்'' என்று வாசன் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT