தமிழகம்

கோவையின் புதிய ஆட்சியராக கிராந்திகுமார் பாடி பொறுப்பேற்பு

செய்திப்பிரிவு

கோவை: கோவை மாவட்ட ஆட்சியராக பணியாற்றிவந்த ஜி.எஸ்.சமீரன், சென்னை பெருநகர மாநகராட்சியின் பணிகள் பிரிவின் இணை ஆணையராகவும், திருப்பூர் மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த கிராந்திகுமார் பாடி கோவை மாவட்ட ஆட்சியராகவும் அண்மையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

2015-ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான கிராந்திகுமார் பாடி, சோலாப்பூரில் உள்ள நவோதயா வித்யாலயா பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை நிறைவு செய்தார். பின்னர், 2011-ம் ஆண்டு சிஏ தேர்வில் அகில இந்திய அளவில் 35-வது இடம் பிடித்து தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி ஐஏஎஸ் அதிகாரியானார்.

இந்திய அஞ்சல்துறையில் உதவி செயலராக பணியாற்றிய அவர், பின்னர் நாமக்கல் மாவட்ட உதவி ஆட்சியராகவும் பணியாற்றியுள்ளார். இந்நிலையில், கோவை மாவட்டத்தின் 183-வது ஆட்சியராக இவர் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு முன்னாள் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது, மாநகராட்சி ஆணையர் பிரதாப் உடனிருந்தார். பொறுப்பேற்ற பிறகு ஆட்சியர் கிராந்திகுமார் பாடி செய்தியாளர்களிடம் கூறும்போது, “அரசுத் துறை திட்டங்களின் பயன்களை எளிய மக்களிடம் கொண்டு சேர்க்கவும், மக்களின் குறைகளை தீர்க்கவும், உள்கட்டமைப்பு, அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்யவும் அனைத்து துறைகளோடு ஒருங்கிணைந்து விரைந்து நடவடிக்கை எடுப்பேன்" என்றார்.

SCROLL FOR NEXT