உதகை: பனிப்பொழிவால் பாதிக்கப்படும் தேயிலைக்கு பயிர் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த அரசு முன் வருமா? என தேயிலை விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் அதிகஅளவில் தேயிலை, மலைக் காய்கறிகள் விளைவிக்கப்படுகின்றன. 65 ஆயிரம் சிறு, குறு விவசாயிகள் மட்டுமின்றி, பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் இத்தொழிலை நம்பி உள்ளனர். பெரும்பாலான விவசாயிகள் கடன் பெற்று விவசாயம் செய்து வருகின்றனர்.
அதே நேரத்தில், மாவட்டத்தின் காலநிலையில் மாற்றங்கள் ஏற்பட்டு, அதிக பனிப்பொழிவு, மழை அதிகம் பெய்வது உள்ளிட்ட காரணங்களால் மலைத்தோட்ட காய்கறி, தேயிலைவிவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டு, ஆண்டுதோறும் இழப்புகளைச் சந்தித்து வருகிறது. மத்திய அரசின் தொழில் வர்த்தகத்துறை மூலமாக ரப்பர், தேயிலை, காபி,குறு மிளகு உள்ளிட்டவற்றுக்கு, முன்னோடி வருவாய் காப்பீட்டுத் திட்டம் அறிவிக்கப்பட்டது.
ஆனால்,இத்திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படாமல் பெயரளவுக்குமட்டுமே உள்ளது. சமவெளிப் பகுதிகளில் கரும்பு உள்ளிட்ட பயிர்களுக்கு காப்பீட்டுத் திட்டம் உள்ளது. ஆனால், நீலகிரியில் இத்திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை.
இதுதொடர்பாக படுக தேச பார்ட்டி நிறுவனத் தலைவர் மஞ்சைவி.மோகன் கூறும்போது, ‘நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக கடும் உறை பனியால், பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் தேயிலை தோட்ட பசுந்தேயிலையும், மலைக் காய்கறி பயிர்களும் முற்றிலும் கருகி, விவசாயிகள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். தேயிலை தோட்டத்தில் மீண்டும் பசுந்தேயிலை கொழுந்துகள் வளர சுமார் நான்கு மாதங்கள் ஆகும்.
அதேபோல மீண்டும் மலைக் காய்கறிகள் வளரவும் நான்கு மாதங்கள் ஆகின்றன. தேயிலை பறிக்கும் பணியும் பாதிக்கப்பட்டுள்ளதால், தொழிலாளர்கள் வேலையின்றி சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் நீலகிரி மாவட்ட தேயிலை விவசாயிகளை இணைக்க தோட்டக் கலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் ஆண்டுதோறும் பாதிக்கப்படும்போது, அப்பகுதிகளை கணக்கெடுத்து பேரிடர் நிவாரணம் வழங்கப்பட்டு வருவதைப்போல, நீலகிரி மாவட்டத்தின் உறைப்பனி காலத்தையும் கணக்கிலெடுத்து பேரிடர் மாவட்டமாக அறிவித்து உரிய நிவாரணம் அளிக்க வேண்டும்.
தமிழக அரசு உடனடியாக உயர்மட்ட குழு அமைத்து நிவாரணதொகை அறிவிக்க வேண்டும். அதனை பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.