தமிழகம்

விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு

செய்திப்பிரிவு

தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் பாரபட்சமின்றி கூட்டுறவு வங்கிகளில் அவர்கள் பெற்ற பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.

தமிழகம் முழுவதும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு, குறு மற்றும் நடுத்தர விவசாயிகள் பெற்ற பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்து கடந்த 2016 ஜூன் 28-ல் தமிழ்நாடு கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அரசாணை வெளியிட்டது.

இந்த அரசாணை சட்ட விரோதமானது என்றும் அதை ரத்து செய்துவிட்டு, பாரபட்சமின்றி அனைத்து விவசாயிகளும் பெற்ற கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் பி.அய்யாகண்ணு, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவு பிறப்பித்தது. அதில், “தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணைப்படி 5 ஏக்கர் வரை நிலம் உள்ள விவசாயிகளுக்கு மட்டும் கடனை தள்ளுபடி செய்யாமல், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் பாரபட்சமின்றி அவர்கள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற அனைத்து பயிர்க் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். இதற்கான புதிய உத்தரவை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும்” என உத்தரவிட் டது.

இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், “தமிழக அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

          
SCROLL FOR NEXT