சென்னை: சென்னை தீவுத்திடலில் நடைபெற்றுவரும் சுற்றுலா கண்காட்சி 29 நாட்களில் 4.88 லட்சம் பார்வையாளர்கள் வருகை தந்துள்ளனர்.
சென்னை தீவுத்திடலில் 47-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி ஜனவரி 4-ம் தேதி தொடங்கியது. 70 நாட்கள் நடைபெறும் இந்த சுற்றுலா கண்காட்சியில் 53 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த அரங்குகளில் தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இவை தவிர 125 சிறிய கடைகள், 70 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பொழுது போக்கு வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், 32-க்கும் மேற்பட்ட விளையாட்டு சாதனங்கள், ராட்சத சாகச விளையாட்டு சாதனங்கள், நவீன கேளிக்கை சாதனங்கள், 10 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் திறந்தவெளி திரையரங்கம் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், அரசு பள்ளி மாணவர்கள் இசை நிகழ்ச்சி, நாட்டுபுற கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.
ரூ.10-க்கு மஞ்சப்பை: கண்காட்சி தொடங்கப்பட்ட நாளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தங்களது குடும்பத்துடன் வந்து பார்வையிட்டு செல்கின்றனர். தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில் சுற்றுச்சூழல் மாசுப்பாட்டை தடுக்கும் வகையில் மஞ்சப்பை வழங்கும் இயந்திரம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தில் ஏராளமான பொதுமக்கள் ரூ.10 நாணயத்தை செலுத்தி மஞ்சப்பையை பெற்று செல்கின்றனர்.
இந்நிலையில், 29-வது நாளான நேற்று முன்தினம் மட்டும் 20 ஆயிரத்து 80 பேர் கண்காட்சிக்கு வருகை தந்துள்ளனர். அந்தவகையில், கண்காட்சி தொடங்கப்பட்டு 29 நாட்களில் 4லட்சத்து 88 ஆயிரத்து 605 பேர்கண்காட்சிக்கு வருகை தந்துள்ளதாக தமிழ்நாடு சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.