சென்னை: தியாகராய நகர் நடைமேம்பாலம் இம்மாத இறுதியில் திறக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை, தியாகராய நகர் மிகப்பெரிய வர்த்தகப் பகுதியாக உள்ளது. இங்கு நாள்தோறும் லட்சக்கணக்கானோர் வந்து செல்வதால் நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. இந்த நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் 3 ஆண்டுகளுக்கு முன் ரூ.30 கோடி செலவில் நடைமேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன.
இந்த நடைமேம்பாலம் தியாகராய நகர் ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்தை இணைக்கும் வகையில் 600 மீட்டர் தூரம், 4 மீட்டர் அகலத்துக்கு இரும்பால் அமைக்கப்பட்டு வருகிறது.
கரோனாவால் தடை: கரோனா பேரிடர் காரணமாக பாலம் அமைக்கும் பணிகள் சிறிது தடைபட்ட நிலையில், கடந்த ஆண்டு மீண்டும் பணிகள் வேகமெடுத்தன. தற்போது அங்கு மின்தூக்கி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அதுவும் இந்த வார இறுதிக்குள் முடிந்துவிடும் எனவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஆக்கிரமிப்பு கண்காணிப்பு: இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: நாள்தோறும் தியாகராய நகருக்கு வரும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பாலம் நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். இங்கு வரும் மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்காலியைப் பயன்படுத்தும் வசதியை வழங்கத் திட்டமிட்டுள்ளோம்.
அவர்கள் மின்தூக்கியில் சென்று பாலத்தில் சக்கர நாற்காலி மூலம் பயணிக்கலாம். இம்மாத இறுதிக்குள் பாலத்தைத் திறப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். பாலம் திறக்கப்பட்ட பின் சாலையோர வியாபாரிகள் ஆக்கிரமிப்பு செய்யாத அளவுக்கு நாள்தோறும் மாநகராட்சி அதிகாரிகள் மூலம் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.