ராஜன் செல்லப்பா | கோப்புப் படம் 
தமிழகம்

பண்ருட்டி ராமச்சந்திரன் கருத்தை யாரும் ஏற்கவில்லை: ராஜன் செல்லப்பா கருத்து

செய்திப்பிரிவு

மதுரை: மதுரை அதிமுக புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளராக தென்னரசுவை தேர்வு செய்து, பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்டனர். இக்கூட்டத்துக்குப் பிறகு, மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பா செய்தியாளர்களிடம் கூறியதாவது: வேட்பாளர் தென்னரசை ஆதரித்து பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதுதான் பொதுக்குழு. அந்தக் குழுவுக்கு உயர்ந்த அங்கீகாரத்தை உச்ச நீதிமன்றம் வழங்கி உள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதிமுக தொண்டர்களின் எண்ணத்தை பிரதிபலித்துள்ளனர். முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறிய கருத்து ஏற்கத்தக்கதல்ல.

உச்ச நீதிமன்ற தீர்ப்பை தங்களுக்கு ஏற்றாற் போல் சில முரண்பட்ட கருத்துகளை அவர் தெரிவித்து வருகிறார். ஓபிஎஸ் ஆதரவாளர்களும் இதையே பேசுகின்றனர். 1976-ம் ஆண்டு ஊழல் புகாரால் கலைக்கப்பட்ட திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் பண்ருட்டி ராமச்சந்தின்.அவரது கருத்து எங்களுக்குத் தேவை இல்லை.

2 பேர் இணைப்புக்கும் வழியில்லை. திமுகவை எதிர்க்கும் வலிமை, ஆற்றல் உள்ள தலைவராக பழனிசாமி உள்ளார். இவ்வாறு அவர் கூறினார். பெரிய புள்ளான் எம்எல்ஏ, பகுதி செயலாளர் வழக்கறிஞர் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றியச் செயலாளர் நிலையூர் முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT