திண்டுக்கல்: தேர்தல் அறிக்கையில் கூறியபடி தொகுப்பூதியத்தில் 10 ஆண்டுகள் பணியாற்றிய டாஸ்மாக் பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை என டாஸ்மாக் பணியாளர் சங்கம் குற்றம்சாட்டி உள்ளது.
திண்டுக்கல்லில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற சங்கத்தின் சிறப்புத் தலைவர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு டாஸ்மாக் நிறுவனத்தில் அனைத்து வகைகளிலும் முறைகேடாக நடந்து வருகிறது.
தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டவாறு 10 ஆண்டுகள் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்தால் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என்ற வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை. தொழிற்சங்க சட்டப்படி நிவாரணம் கிடைக்கப் பெறவில்லை. டாஸ்மாக் பணியாளர்கள் மோசமாக நடத்தப்படுகிறார்கள். தமிழகத்தில் எத்தனை பார்கள் சட்டப்பூர்வமாக அனுமதி பெற்று நடத்தப்படுகின்றன.
அனுமதியின்றி எத்தனை பார்கள் நடத்தப்படுகின்றன என்பது குறித்த வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும். பணியாளர்களின் கோரிக்கைகள் 19 ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டு வருவதால், மார்ச் 2-ம் தேதி தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் அறிவித்துள்ள ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டத்தில் டாஸ்மாக் பணியாளர்கள் பங்கேற்பர். இவ்வாறு அவர் கூறினார்.