திருவள்ளூர் மாவட்டத்தில் 203 பள்ளிகள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. இதில் கிராமப்புறத்தில் செயல்படும் 27 அரசுப் பள்ளிகளும் அடங்கும்.
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 612 உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கடந்த மார்ச் மாதம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினர். இதன் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில், 203 பள்ளிகள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. கடந்த ஆண்டு 196 பள்ளிகள் சதம் அடித்த நிலையில் இந்த ஆண்டு கூடுதலாக 7 பள்ளிகள் நூறு சதவீதத்தை எட்டியுள்ளன.
இதில், எருமைவெட்டிபாளையம், நொச்சிலி, கிளாம்பாக்கம், பிளேஸ்பாளையம், மெய்யூர், அல்லிகுழி உள்ளிட்ட கிராமப்புறங்களில் உள்ள 27 அரசு பள்ளிகளும் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன.
சமூக நலத்துறையின் கீழ் உள்ள பூந்தமல்லி பார்வையற்றோர் மேல்நிலைப் பள்ளி மற்றும் அம்பத்தூர், திருவொற்றியூர், கோவில்பதாகை, ஆவடி, கோணம்பேடு ஆகிய பகுதிகளில் உள்ள 5 நகராட்சி பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.
மேலும், மீஞ்சூர், மிட்னமல்லி, வல்லூர், புங்கத்தூர் பகுதிகளில் உள்ள 4 ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சியடைந்துள்ளன. மீஞ்சூர், திருவொற்றியூர், ஆவடி பகுதிகளைச் சேர்ந்த 4 அரசு உதவிபெறும் பள்ளிகளும், முகப்பேர், அண்ணா நகர், பாடி பகுதிகளில் உள்ள தனியாருக்கு சொந்தமான 3 காதுகேளாதோர், வாய்பேச முடியாதோருக்கான சிறப்பு பள்ளிகளும், 6 சுய நிதி பள்ளிகளும் நூறு சதவீத தேர்ச்சியடைந்துள்ளன. இவை தவிர 153 மெட்ரிக்குலேஷன் பள்ளிகளும் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.