முட்டையிட்டுத் தன் இனத்தை விருத்தி செய்து கொள்வதற்காக மேற்குத் தொடர்ச்சிமலை பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான வண்ணத்துப் பூச்சிகள் அடிவாரப் பகுதிக்கு இடம்பெயர்ந்து வரத் தொடங்கியுள்ளன.
சாம்பல் நிற அணில்கள்
விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டப் பகுதிகளில் உள்ள மேற்குத் தொடர்ச்சிமலை பகுதிகளில் சாம்பல் நிற அணில்கள் சரணாலயம் அமைந்துள்ளது. வேறு எங்கும் காண முடியாத வகையில் சுமார் ஒரு மீட்டர் நீளம் வரை வளரக்கூடிய அதிக எண்ணிக்கையிலான இந்த வகை அணில்கள் இங்கு மட்டுமே காணப்படுகின்றன. அதனால், கடந்த 26.12.1988-ம் தேதி இந்த வனப்பகுதி சாம்பல் நிற அணில் வன உயிரின சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.
இச்சரணாலயத்தில் 32 வகையான பாலூட்டிகள், 200-க்கும் மேற்பட்ட பறவையினங்களும், 53 வகையான ஊர்வன இனங்களும், நிலத்திலும் நீரிலும் வாழக்கூடிய 24 வகையான உயிரினங்களும், 56 வகையான வண்ணத்துப் பூச்சியினங்களும் பல்வேறு அரிய தாவர வகைகளும் காணப்படுகின்றன.
தற்போது, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியிலும், அதனை ஒட்டியுள்ள வனப் பகுதிகளிலும் அவ்வப்போது மிதமான மழை பெய்து வருவதால் பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் ஏற்ற சூழல் உருவாகி உள்ளது.
குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் வண்ணத்துப் பூச்சிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. திருவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு, ராஜபாளையம் அய்யனார் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் விதவிதமான வண்ணத்துப் பூச்சிகள் ஏராளமாக காணப்படுகின்றன.
இதுகுறித்து பறவைகள் ஆர்வலர் சரண் கூறியதாவது: பொதுவாக மார்ச், ஏப்ரல் மாதங்களில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் மட்டுமே காணப்படும் கொன்னை வெள்ளையன், கொக்கிக்
குறி வெள்ளையன், பருபலா வெள்ளையன், வெண்புள்ளிக் கருப்பன், வெந்தைய வரியன், எலுமிச்சை அழகி, கத்திவால் அழகி போன்ற வகை வண்ணத்துப் பூச்சிகள் அடிவாரப் பகுதிகளுக்கு பல ஆயிரக்கணக்கில் இடம்பெயர்ந்து வரும். அவை முட்டையிட்டு குஞ்சு பொறித்த பின்னர் செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் மீண்டும் வனப் பகுதிக்குள் இடம்பெயரும். நீலகிரி, மேட்டுப்பாளையம் கல்லார்,
திருச்சி பச்சமலை பகுதிகளில் இந்த வகை வண்ணத்துப்பூச்சிகள் லட்சக்கணக்கில் இடம்பெயர்ந்து செல்லும் என்றார்.இதுகுறித்து, வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘மழையின்மை காரணமாக வண்ணத்துப் பூச்சிகள் இடம்பெயர்வு காலதாமதமாக நடக்கிறது. தற்போது வனப்பகுதியிலும் வனத்தை ஒட்டியுள்ள அடிவாரப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இதனால், ஏராளமான பூக்கள் பூக்கத் தொடங்கியுள்ளன. வண்ணத்துப் பூச்சிகள் முட்டையிடுவதற்கு பூக்களும், மகரந்தமும் முக்கிய காரணிகள் என்பதால் அவை அடிவாரப் பகுதிகளுக்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளன.
விருதுநகர் மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சிமலை அடிவாரப் பகுதியான ராஜபாளையம் அருகே உள்ள அய்யனார் கோயில், திருவில்லிபுத்தூர் அருகே உள்ள செண்பகத் தோப்பு மற்றும் அதன் சுற்றுவட்டாரங்கள், கோவிலாறு அணை மற்றும் ஆற்றுப்படுகை ஆகிய இடங்களில் ஆயிரக்கணக்கான வண்ணத்துப் பூச்சிக் கூட்டங்கள் முகாமிட தொடங்கியுள்ளன’’ என்று தெரிவித்தனர்.
அய்யனார்கோயில் ஆற்றில் குளிப்பதற்காகவும், செண்பகத் தோப்பு பகுதிகளுக்கும் வரும் சுற்றுலாப் பயணிகள் வண்ணமயமான கண்கவர் வண்ணத்துப் பூச்சிகள் கூட்டத்தைக் கண்டு மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து, சாத்தூரைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி முருகானந்தம் கூறும்போது, ‘‘விடுமுறை நாட்களில் குழந்தைகளை அழைத்துக்கொண்டு அய்யனார்கோயில் ஆற்றில் குளிக்க வருவது உண்டு. இங்கு, கூட்டம் கூட்டமாக நூற்றுக்கணக்கில் சுற்றிவரும் வண்ணத்துப் பூச்சிகளைக் காண்பது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் ஆயிரக்கணக்கான பட்டாம் பூச்சிகளைக் காண்பது மனதுக்கு புத்துணர்ச்சியை தருகிறது’’ என்றார்.