ரஜினி தனிக்கட்சி தொடங்கும் வாய்ப்புள்ளதாக தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 26-வது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதை யொட்டி, பெரும்புதூரில் உள்ள அவரது நினைவிடத்தில் திருநாவுக்கரசர் தலைமையில் காங்கிரஸார் அஞ்சலி செலுத் தினர்.
பின்னர் நிருபர்களிடம் திருநாவுக்கரசர் கூறியதாவது:
ரஜினி எனது 40 ஆண்டுகால நண்பர். அவர் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறோம். அதேவேளையில் அவர் மாநில கட்சிகளிலோ அல்லது தேசிய கட்சிகளிலோ சேரமாட்டார் என நம்புகிறேன். அவர் தேசிய சிந்தனை உள்ளவர். எனவே, தனிக்கட்சி தொடங்குவார் என நம்புகிறேன்.
நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகளின் குரல் வளையை நெரிக்கும் வகை யில், மிரட்டும் வகையில் மத்திய அரசு செயல்பட்டுக் கொண்டி ருக்கிறது. அரசியல் தலைவர் களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துகின்றனர். இதை, வன்மை யாகக் கண்டிக்கிறோம்.
சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் பிரதமரை சந்திப்பதற்கு ஸ்டா லினுக்கு மத்திய அரசு ஒரு வாய்ப்பு அளித்திருக்க வேண்டும். விவசாயிகளின் போராட்டத்துக்கு மதிப்பளிக்கும் வகையில் அவர்களை சந்திப் பதற்கும் ஒரு வாய்ப்பு அளித்திருக்க வேண்டும். அதுவும் செய்யவில்லை. மத்திய அரசின், இந்த அலட்சியப் போக்கை வன்மையாகக் கண் டிக்கிறோம்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் 7 பேரை விடுதலை செய்வது குறித்து நீதிமன்றமே முடிவு செய்யும். திமுக தலைவர் கருணாநிதியின் சட்டப்பேரவை வைர விழாவில், ராகுல் காந்தி கலந்துகொள்ள வாய்ப்புள்ளது.
அதிமுக இரு அணி களிடமும் பேச்சுவார்த்தை நடத்தி பின்வாசல் வழியாக தமிழகத்தில் பாஜக நுழையப் பார்க்கிறது.
இவ்வாறு திருநாவுக்கரசர் தெரிவித்தார்.